ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு சத்தான மற்றும் சுவையான முளைவிட்ட பச்சை பயிறு கட்லெட்! ரெசிபி இதோ…

மாலை நேரங்களில் டீ, காபி குடிக்கும் பொழுது நொறுக்கு தீனி சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கும் . அப்படி சாப்பிடும் நொறுக்கு தீனிகள் சுவையானதாக மட்டும் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. குழந்தைகள் மற்றும் பெரியவர்களை மனதில் நினைத்து சத்தானதாகவும் இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு அவ்வபோது சத்தான உணவுகளை நாம் கொடுத்து வருவதன் மூலமே அவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியுடன் ஆரோக்கியமாக வளர முடியும். அந்த வகையில் குழந்தைகள் முதல் பெரியவர்களின் உடல் மற்றும் மன பலத்தை உறுதிப்படுத்தும் வகையில் முளைகட்டிய பச்சை பயிறு வைத்து அருமையான கட்லெட் செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்..

ஒன்று அல்லது இரண்டு கப் பச்சை பயிரை நன்கு கழுவி சுத்தம் செய்து குறைந்தது 12 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு அதை மீண்டும் ஒருமுறை கழுவி சுத்தம் செய்து தண்ணீரை வடிகட்டி முளை கட்ட வேண்டும். அடுத்த 10 மணி நேரத்தில் பச்சை பயிறு நன்கு முளைகட்டி அருமையாக நமக்கு கிடைக்கும்.

அடுத்து ஒரு மிக்ஸி ஜாரின் மூன்று பல் வெள்ளை பூண்டு, ஒரு பச்சை மிளகாய், கைப்பிடி அளவு மல்லி இலை மற்றும் புதினா இலை, முளைகட்டி வைத்திருக்கும் பச்சை பயிறு, அரை தேக்கரண்டி சீரகம், ஒரு சிறிய துண்டு இஞ்சி, அரை தேக்கரண்டி கல் உப்பு சேர்த்து மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் இதனுடன் அரை தேக்கரண்டி தனி மிளகாய் தூள் இறுதியாக சேர்த்து மீண்டும் ஒருமுறை நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பச்சை பயிறு மாவை அரைக்கும் பொழுது மிகவும் மையாக அரைத்துக் கொள்ளாமல் சற்று கரகரப்பாக அழைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது அரைத்த பச்சை பயிறு மாவை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளலாம். இதனுடன் கொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், முக்கால் கப் ரவை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும். முழுமையாக ரவை சேர்த்து நன்கு கலந்த பிறகு 10 முதல் 15 நிமிடம் மாவை அப்படியே ஊற வைக்க வேண்டும்.

சிறுதானியமான வெள்ளைச் சோளம் வைத்து அருமையான மற்றும் ஈஸியான உப்புமா ரெசிபி!

பத்து முதல் 15 நிமிடம் தனியாக வைக்கும் பொழுது ரவை நன்கு ஊறி மாவோடு ஒருசேர கலந்து வரும். அதன் பிறகு இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கட்லட் வடிவிற்கு திரட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இப்படி நாம் கலந்து வைத்திருக்கும் அனைத்து மாவையும் உருண்டைகளாக திரட்டி எடுத்துக் கொள்ளலாம்.

இப்பொழுது ஒரு அகலமான கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சூடானதும் வட்ட வடிவில் திரட்டி வைத்திருக்கும் பச்சை பயிறு மாவு உருண்டைகளை எண்ணெயில் சேர்த்து பொறித்து எடுத்துக் கொள்ளலாம். பொன்னிறமாக மாறியதும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். இப்பொழுது சுவையான மற்றும் ஹெல்த்தியான முளைகட்டிய பச்சை பயிறு கட்லெட் தயார்.

Exit mobile version