வீட்டிற்கு வீடு கண்டிப்பாக ஒரு தோசை சைக்கோ இருப்பார்கள். அதாவது மூன்று வேலையும் தோசையை உணவாக கொடுத்தால் முகம் சுளிக்காமல் விரும்பிய படியே சாப்பிடுவார்கள். விசேஷ நாட்களும் சரி சாதாரண நாட்களும் சரி தங்களுக்கு பிடித்த உணவாக தோசையை கொண்டாடுவார்கள். அப்படி தோசை பிரியர்களுக்கான ரெசிபி தான் இது. எப்போதும் ஒரே மாதிரியாக தோசை செய்து விதவிதமான சைட் டிஷ் வைத்து சாப்பிடுபவர்களுக்கு இந்த நெல்லூர் ஸ்டைல் முட்டை கார தோசை கொஞ்சம் ஸ்பெஷலாகத்தான் இருக்கும். வாங்க இந்த முட்டைக்கார தோசை செய்வதற்கான ரெசிபியை பார்க்கலாம்…
இந்த கார தோசை செய்வதற்கு முதலில் காரமான சட்னி ஒன்றை தயார் செய்து கொள்ளலாம். அதற்காக ஒரு மிக்ஸி ஜாரின் பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், காய்ந்த வத்தல் ஐந்து முதல் ஏழு, வெள்ளைப் பூண்டு ஐந்து, பெரிய நெல்லிக்காய் அளவு புளி, அரை தேக்கரண்டி கல்லுப்பு சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த சட்னி அரைக்கும் பொழுது தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. அடுத்ததாக ஒரு சிறிய கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்துக் கொள்ளவும். இதனுடன் நாம் அரைத்து வைத்திருக்கும் சட்னியை கடாயில் சேர்த்து ஐந்து நிமிடம் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக தோசை தயார் செய்து கொள்ளலாம். தோசை கல்லை அடுப்பில் வைத்து விதமாக சூடு படுத்தியதும் தோசை மாவை மெல்லியதாக கல்லில் ஊற்றிக் கொள்ள வேண்டும். கல்லின் உள்பக்கமும் வெளிப்பக்கமும் இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்துக் கொள்ளலாம்.
தோசையின் மேல் முதலில் மலைச்சாரல் போல இட்லி பொடி தூவிக்கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து அதில் பச்சை மிளகாய், வெங்காயம், கைப்பிடி அளவு கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
இந்த கலவையை தோசையின் மேல் நாம் ஊற்றிக் கொள்ளலாம். அதற்கு மேலாக நாம் அரைத்து வைத்திருக்கும் காரச் சட்னியை லேசாக பரப்ப வேண்டும். முட்டையுடன் சேர்த்து இந்த காரச் சட்னி நன்கு கலந்து தோசைக்கு ஒரு தனி சுவையை தரும்.
இப்படி முன்னும் பின்னும் வேகவைத்து எடுத்தால் சுவையான நெல்லூர் ஸ்டைல் கார முட்டை தோசை தயார். இந்த தோசை சாப்பிடுவதற்கு சட்னி சாம்பார் என தனியாக ஏதும் தேவைப்படாது அப்படியே சாப்பிட்டு விடலாம். தேவைப்பட்டால் காரம் குறைவாக உள்ள தேங்காய் சட்னி வைத்து சாப்பிடலாம். தோசை பிரியர்களுக்கு இந்த விதமான தோசை ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.