ஒரே மண மணக்கும் கல்யாண வீட்டு கெட்டி சாம்பார்!

சாம்பார் இல்லாமல் எந்த விசேஷ நாட்களும் இருக்காது. தென்னிந்திய உணவு முறைகளில் சாம்பாருக்கு தனி இடம் உள்ளது. சாம்பார் இல்லாமல் எந்த உணவு பந்தியும் சிறப்பாக அமையாது. அந்த அளவிற்கு சாம்பாருக்கு தனி மவுசு தான். அதிலும் கல்யாண வீட்டு சாம்பார் என்றாலே ஒரே மண மணக்கும். கல்யாண வீட்டு சாம்பார் செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ!

இந்த கல்யாண வீட்டு சாம்பார் செய்வதற்கு முதலில் மசாலாக்களை வறுத்து பொடி செய்து கொள்ள வேண்டும். அதேபோல் ஒன்றரை கப் துவரம் பருப்பிற்கு கால் கப் பாசிப்பருப்பு என்ற வீதத்தில் பருப்புகளை அளந்து எடுத்து நன்கு மையாக வேக வைத்துக் கொள்ள வேண்டும்.

அதற்காக ஒரு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி கடலைப்பருப்பு, ஒரு தேக்கரண்டி பாசிப்பருப்பு, ஒரு தேக்கரண்டி தனியா, காரத்திற்கு ஏற்ப காய்ந்த வத்தல் நான்கு முதல் ஆறு சேர்த்து நன்கு வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக அரை தேக்கரண்டி சீரகம், அரை தேக்கரண்டி மிளகு, 5 பல் வெள்ளைப்பூண்டு, கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்க வேண்டும்.

இறுதியாக அரை கப் துருவிய தேங்காய் சேர்த்து வாசனை வரும்வரை வறுத்துக் கொள்ள வேண்டும். வறுத்த இந்த பொருட்களை ஒரு அகலமான தட்டிற்கு மாற்றி சிறிது நேரம் ஆறவிட வேண்டும். சூடு நன்கு குறைந்ததும் வறுத்த இந்த பொருட்களை மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு, கால் தேக்கரண்டி வெந்தயம், ஒரு காய்ந்த வத்தல், கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

கடுகு நன்கு பொரிந்ததும் 10 முதல் 15 சின்ன வெங்காயம், ஐந்து பல் வெள்ளை பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள், ஒன்றரை தேக்கரண்டி மல்லித்தூள், அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் வாசனை செல்லும்வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.

நன்கு பழுத்த ஒரு தக்காளி பழத்தை பொடியாக நறுக்கி கடாயில் சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி வதங்கும் நேரத்தில் அரை தேக்கரண்டி உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும். தக்காளி நன்கு மசிந்ததும் சாம்பார் இருக்கு தேவையான காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம். இரண்டு கத்திரிக்காய், ஒரு முருங்கைக்காய், 5 அவரைக்காய், அரைக்கப் முள்ளங்கி , நான்கு துண்டு மாங்காய், கால் கப் கேரட் மற்றும் பீன்ஸ் போன்ற காய்கறிகளை சேர்த்து சாம்பார் வைக்கும் பொழுது சுவையாகவும் வாசமாகவும் இருக்கும்.

இந்த காய்கறிகளை நன்கு கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி தக்காளி பழம் நன்கு வதங்கியதும் அதனுடன் சேர்த்து ஒருமுறை வதக்க வேண்டும். அதன் பின் காய்கறிகள் வெந்து வருவதற்கு தேவையான தண்ணீர் சேர்த்து மூடி போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

காய்கறிகள் முக்கால் பாகம் வெந்ததும் நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலா கலவையை அதனுடன் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். இப்பொழுது தான் காய்கறிகளில் மசாலா சேர்ந்து கொதித்து ஒரு சேரக் காரசாரம் கிடைக்கும்.

இட்லி மாவு இல்லாத நேரத்தில் சுவையான இனிப்பு இட்லி!

மசாலா கலவை தொடர்ந்து மூன்று முதல் நான்கு நிமிடங்கள் கொதிக்க வேண்டும். அதன் பின் எலுமிச்சை பழ அளவு ஊறவைத்த புளி கரைசலை சேர்த்து கலந்து கொள்ளவும். இறுதியாக நாம் வேக வைத்திருக்கும் பாசிப்பருப்பு மற்றும் துவரம் பருப்பை இதனுடன் சேர்த்து தேவைக்கு ஏற்ப உப்பு கலந்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

குறைந்தது இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் குழம்பு நன்கு தல தலவென கொதிக்க வேண்டும். இறுதியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தலை மற்றும் கருவேப்பிலை தூவி இறக்கினால் சுவையான கல்யாண வீட்டு சாம்பார் தயார்.

Exit mobile version