இனி வீட்டிலேயே செய்யலாம் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒயிட் சாஸ் பாஸ்தா…!

பாஸ்தா இத்தாலியை தாயகமாக கொண்ட உணவு பொருளாகும். இது இத்தாலியை தாயகமாகக் கொண்டிருந்தாலும் இன்று உலகெங்கும் பல மக்களால் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவுப் பொருளாக இருக்கிறது. குழந்தைகளில் இருந்து பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய இந்த பாஸ்தாவை பலரும் பலவேறு விதமாக செய்வார்கள். ஒவ்வொருவரும் தங்களின் ருசிக்கு ஏற்ப இந்த பாஸ்தாவில் மசாலாக்கள், காய்கறிகள், சாஸ்கள் ஆகியவற்றை வித்தியாசமாக சேர்த்து செய்வது உண்டு. இதில் அனைவருக்குமே பிடித்தமான ஒயிட் சாஸ் பாஸ்தாவை எப்படி வீட்டில் செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

குழந்தைகளுக்கு பிடித்த பாஸ்தா… இப்படி செய்து பாருங்கள்!

ஒயிட் சாஸ் பாஸ்தா செய்வதற்கு முதலில் பாஸ்தாவை தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் கொதித்ததும் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து 100 கிராம் அளவு பாஸ்தாவை சேர்க்க வேண்டும். பாஸ்தாவின் பாக்கெட்டில் இந்த பாஸ்தாவை எவ்வளவு நேரம் வேக வைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். பாக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள நேரம் மட்டுமே பாஸ்தாவை வேக வைக்க வேண்டும். இப்பொழுது நாம் இந்த பாஸ்தாவை 15 நிமிடங்கள் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். வேகவைத்து எடுத்த பாஸ்தாவில் தண்ணீரை வடித்து எடுத்து கொள்ள வேண்டும். வடிகட்டிய பிறகு இதில் சில துளிகள் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும்.

இப்பொழுது ஒரு பேனில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு வெண்ணெய் சேர்க்கவும். வெண்ணெய் உருகியதும் இரண்டு பல் பூண்டை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். பூண்டை நன்கு வதக்கவும் பூண்டு வதங்கி பச்சை வாசனை போனதும் இதில் ஆறு காளான்களை நறுக்கி சேர்க்கவும். காளான் ஓரளவு வெந்ததும் இதில் கால் கப் அளவிற்கு பச்சை பட்டாணி, கால் கப் சோளம், பாதி குடமிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். காய்கறிகளுக்கு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். காய்கறிகள் வதங்கி வெந்ததும் இதனை வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி விடலாம்.

இப்பொழுது பேனில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு வெண்ணை சேர்க்கவும். வெண்ணெய் உருகியதும் அதில் 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு மைதா சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். மைதா நிறம் மாற வேண்டிய அவசியம் இல்லை. பிறகு இதில் இரண்டு கப் அளவிற்கு பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பால் கொதித்து கெட்டியானதும் இதில் துருவி வைத்திருக்கும் சீசை சேர்க்கலாம். சீஸ் இறுகும் பொழுது பால் இன்னும் இறுகி கிரீமியான பதத்தில் இருக்கும். இப்பொழுது நாம் வேகவைத்து வைத்திருக்கும் காய்கறிகள் மற்றும் வேக வைத்திருக்கும் பாஸ்தா ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும். பிறகு இதற்கு தேவையான அளவு உப்பு, கால் டீஸ்பூன் அளவுக்கு காய்ந்த துளசி, கால் டீஸ்பூன் அளவிற்கு சில்லி ஃப்ளெக்ஸ், சிறிதளவு மிளகு தூள் ஆகியவற்றை சேர்த்து கிளறி விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான ஒயிட் சாஸ் பாஸ்தா தயாராகிவிட்டது.

Exit mobile version