கிராமத்து ஸ்டைலில் வீடே மணக்கும் மீன் குழம்பு…! மீன் குழம்பு அடுத்த முறை இப்படி செய்ய மறக்காதீர்கள்!

மீன் குழம்பு அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவு. சூடான சாதத்தில் சுவையான மீன் குழம்பு வீட்டில் மணக்க மணக்க வைத்து சாப்பிடுவது என்றால் அனைவருக்கும் அலாதியான இன்பம் தான். பெரும்பாலும் பழைய குழம்புகளையோ உணவு வகைகளையோ அடுத்த வேளைக்கு சாப்பிடுவது என்றால் பலருக்கும் பிடிக்காது. ஆனால் மீன் குழம்பு மட்டும்தான் முதல் நாள் வைத்த குழம்பை அடுத்த நாள் வரை கொடுத்தாலும் அனைவரும் விரும்பி சாப்பிடுவர். காரணம் இந்த குழம்பு நேரம் ஆக ஆக இன்னும் சுவை கூடும். சாதத்திற்கு மட்டுமில்லாமல் இட்டலி, தோசை என அனைத்து உணவுகளுக்கும் கூட இந்த மீன் குழம்பு அட்டகாசமாக இருக்கும்.

இந்த மீன் குழம்பை எப்படி கிராமத்து ஸ்டைலில் செய்யலாம் என்பதை பார்ப்போம். மீன் குழம்பு செய்ய அரை கிலோ அளவுக்கு மீனை நன்கு சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். மீனை நன்கு அலசிக் கொள்ளுதல் அவசியம். இந்தக் குழம்பிற்கு 15 முதல் 20 சின்ன வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். நன்கு பழுத்த ஒரு தக்காளியையும் நறுக்கிக் கொள்ளுதல் வேண்டும். 12 முதல் 15 பல் பூண்டினை உரித்து வைத்துக் கொள்ளவும். கறிவேப்பிலை இரண்டு கொத்தை உருவி வைத்துக் கொள்ளுங்கள்.

இரண்டு நெல்லிக்காய் அளவு புளியை எடுத்து ஊற வைத்துக் கொள்ள வேண்டும். இந்த புளி ஊறிய பிறகு தண்ணீரில் நன்கு கரைத்துக் கொள்ள வேண்டும். இந்தப் புளித்தண்ணீரில் மூன்றரை ஸ்பூன் அளவு மல்லித்தூள், 2 ஸ்பூன் மிளகாய்த்தூள், அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கரைத்துக் கொள்ள வேண்டும். இதிலேயே தேவையான அளவு உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.

மீன் குழம்பு வைக்க மற்ற பாத்திரங்களை விட மண் சட்டி மிகவும் ஏற்றது. மண் சட்டியில் வைக்கும் மீன் குழம்பு நல்ல சுவையுடன் இருக்கும். எனவே ஒரு மண் சட்டி பாத்திரத்தில் 3 மேசை கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து கொள்ளவும். எண்ணெய் காய்ந்ததும் ஒரு ஸ்பூன் வெந்தயம், ஒரு ஸ்பூன் சோம்பு சேர்த்து நன்கு பொரிய விட வேண்டும். இவை நன்கு புரிந்ததும் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து பூண்டு பற்களை சேர்த்து வதக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும். வெங்காயமும் தக்காளியும் நன்கு வதங்கி மென்மையாகும் வரை இதனை வதக்க வேண்டும்.

இப்பொழுது கரைத்து வைத்திருக்கும் புளி கரைசலை இதனுடன் ஊற்ற வேண்டும். காரம் உப்பு சரிபார்த்து இதனை நன்கு கொதிக்க விடவும். ஓரளவு கொதித்ததும். இரண்டு மேசை கரண்டி அளவு தேங்காய் துருவலை மிக்ஸி ஜாரில் அரைத்து அந்த விழுதையும் இதனுடன் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். குழம்பு நன்கு கொதித்ததும் சுத்தம் செய்து நறுக்கிய மீனை இதனுடன் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும். மீன் வெந்ததும் இதனை அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.

அவ்வளவுதான் சுவையான மணம் நிறைந்த மீன் குழம்பு தயார்!

Exit mobile version