குழந்தைகளுக்கு அருமையான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி… காய்கறிகள் சேர்த்த வெஜிடபிள் புலாவ்!

குழந்தைகளுக்கான லஞ்ச் பாக்ஸ் தயார் செய்வது என்பது ஒவ்வொரு தாய்க்கும் தினமும் காலையில் நடக்கும் மிகப்பெரிய சவால் ஆகும். என்னதான் ருசியாக செய்து கொடுத்தாலும் குழந்தைகள் காய்கறிகளை சாப்பிடுவது என்றால் அறவே வெறுப்பார்கள். கவலை வேண்டாம் இனி காய்கறிகளின் சத்து குழந்தைகளுக்கு முழுமையாக கிடைக்க சத்தான காய்கறிகளை சேர்த்து சுவையான வெஜிடபிள் புலாவ் இந்த முறையில் செய்து பாருங்கள் குழந்தைகள் கட்டாயம் விரும்பி உண்பார்கள்.

ஹோட்டல் சுவையில் அருமையான தேங்காய் சட்னி! இனி தேங்காய் சட்னி இப்படி செய்யுங்க!

இரண்டு கப் பாஸ்மதி அரிசியை கழுவி சிறிதளவு உப்பு சேர்த்து பதமாக சாதம் வடித்து ஆறவிட வேண்டும். சாதம் குழைந்து விடக் கூடாது உதிரியாக இருக்க வேண்டும். சிறிய கடாயில் நெய் காயவைத்து அதில் 10 முந்திரியை வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும். நாலு ஸ்லைஸ் பிரெட்டை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி அதே நெய்யில் வறுத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு சிறிய துண்டு இஞ்சி, பத்து பல் பூண்டு, 10 பச்சை மிளகாய், சிறிதளவு புதினா, சிறிதளவு கொத்தமல்லி ஆகியவற்றை நன்கு கழுவி ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து மை போல அரைத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது ஒரு பாத்திரத்தில் நான்கு ஸ்பூன் எண்ணெய் காய வைத்து அதில் இரண்டு பட்டைத் துண்டு, இரண்டு பிரியாணி இலை, நான்கு கிராம்பு, நான்கு ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். இவற்றை தாளித்த பிறகு நீளவாக்கில் மெல்லிசாக நறுக்கிய பெரிய வெங்காயம் 2 சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் விழுதை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்கு வதக்க வேண்டும்.

சப்பாத்தி, பூரி, பரோட்டாவிற்கு அட்டகாசமான வெஜிடபிள் குருமா…!

இவற்றை வதக்கிய பிறகு பொடியாக நறுக்கிய இரண்டு கேரட், 10 பீன்ஸ், 150 கிராம் அளவு பச்சைப்பட்டாணி ஆகியவற்றை சேர்த்து சிறிது நேரம் வதக்கி தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து வேக விட வேண்டும். காய்கறிகள் குழைந்து விடக்கூடாது. இவை வெந்ததும் ஏற்கனவே வடித்து வைத்திருக்கும் சாதத்தை இதில் சேர்த்து கிளற வேண்டும். இதன் மேல் வறுத்து வைத்திருக்கும் பிரட் மற்றும் முந்திரி சேர்த்து கொத்தமல்லி புதினா தூவி சிறிது நேரம் கிளறி இறக்கிவிடலாம். அவ்வளவுதான் சுவையான வெஜிடபிள் புலாவ் தயார்!

Exit mobile version