உங்க குழந்தைங்க லஞ்ச் பாக்ஸுக்கு தக்காளி சாதம் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!

தக்காளி சாதம் பலருக்கும் பிடித்தமான ஒரு வெரைட்டி ரைஸ் ஆகும். பெரும்பாலும் குழந்தையின் லஞ்ச் பாக்ஸுக்கு அவசரமாக சட்டென்று ஏதாவது செய்ய வேண்டும் என்றால் பெரும்பாலான தாய்மார்களின் தேர்வு தக்காளி சாதமாகத் தான் இருக்கிறது. இந்த தக்காளி சாதம் எளிமையான ஒரு சாதம் ஆகும் ஆனால் இதன் சுவை மிக அருமையாக இருக்கும்.

தக்காளி சாதத்தின் செய்முறையை பலரும் பல விதமாக பின்பற்றி செய்வார்கள். ஒருமுறை தக்காளி சாதத்தை இதுபோன்று கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை அரைத்து சேர்த்து செய்து பாருங்கள் இதன் சுவை மீண்டும் மீண்டும் உங்களை செய்ய சொல்லும். உங்கள் குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸும் வீட்டிற்கு வரும் பொழுது காலியாக தான் வரும்.

தக்காளி சாதம் செய்யும் முறை:

இரண்டு பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் மிக மெல்லியதாக வெட்டிக் கொள்ளவும். பழுத்த தக்காளிகள் 3 பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். 5 பச்சை மிளகாயுடன், ஆறு பல் பூண்டு ஒரு சிறிய துண்டு இஞ்சி, சிறிதளவு புதினா மற்றும் கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து ஒரு மிக்ஸி ஜாரில் அரைத்து எடுத்துக் கொள்ளவும். சிறிதளவு புதினா மற்றும் கொத்தமல்லியை தனியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது ஒரு பிரஷர் குக்கரில் மூன்று ஸ்பூன் எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் நெய் சேர்த்து காய வைக்க வேண்டும். இவை காய்ந்த பின் ஒரு துண்டு பட்டை, இரண்டு கிராம்பு, ஒரு ஏலக்காய், இரண்டு பிரியாணி இலை ஆகியவற்றை தாளித்துக் கொள்ள வேண்டும்.

நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் சற்று வதங்கியதும் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும். இவை இரண்டும் நன்றாக வதங்கிய பின் மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் விழுதை இதனுடன் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை மிதமான தீயில் வதக்க வேண்டும்.

ஒன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் தண்ணீர் ஊற்ற வேண்டும். ஒரு ஆழாக்கு அரிசியை கழுவி இதனுடன் சேர்த்து உப்பு போட்டு குக்கரை மூடி விட வேண்டும். இரண்டு விசில் வரும் வரை காத்திருக்கவும் அதன் பின் அடுப்பை அணைத்து விசில் அடங்கியதும் குக்கர் மூடியை திறந்து நறுக்கி வைத்திருக்கும் புதினா மற்றும் கொத்தமல்லியை சேர்த்து கிளற வேண்டும்.

விருப்பப்பட்டால் குக்கரை மூடுவதற்கு முன்பு அரை மூடி எலுமிச்சை பழத்தை பிழிந்து கொள்ளலாம்.

அவ்வளவுதான் சுவையான எளிமையான தக்காளி சாதம் தயார்…!

Exit mobile version