ஒருமுறை இப்படி தக்காளி சட்னி செய்து பாருங்கள்… கையேந்தி பவன் ஸ்டைலில் அட்டகாசமான சட்னி ரெசிபி…!

இட்லி தோசை போன்ற டிபன் வகைகளுக்கு வீட்டில் என்னதான் சுவையாக சட்னி செய்தாலும் ஹோட்டல்களில் கிடைக்கும் சட்னியின் சுவைக்கு இணையாக இருப்பது இல்லை. அதுவும் குறிப்பாக கையேந்திபவன்களில் கிடைக்கும் தக்காளி சட்னி பலருக்கும் பிடித்தமான ஒன்று. இனி இந்த ரெசிபியை நீங்கள் தெரிந்து கொண்டால் கையேந்தி பவனில் கிடைக்கும் அதே சுவையில் தக்காளி சட்னியை நீங்கள் வீட்டிலேயே செய்ய முடியும். வாருங்கள் இப்பொழுது கையேந்தி பவன் தக்காளி சட்னி ரெசிபியை பார்க்கலாம்.

இந்த தக்காளி சட்னி செய்வதற்கு ஒரு மிக்ஸி ஜாரில் அரை ஸ்பூன் சீரகம், அரை கப் அளவிற்கு நறுக்கிய சின்ன வெங்காயம், ஐந்து பல் பூண்டு, ஏழு காய்ந்த மிளகாய், மூன்று காஷ்மீரி மிளகாய் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். மிளகாயின் எண்ணிக்கையை உங்கள் காரத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம். காஷ்மீரி மிளகாய் நிறம் மட்டுமே கொடுக்கும் அதிக காரம் இல்லாத மிளகாய் ஆகும். இவற்றை நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். நன்கு அரைத்த பிறகு இரண்டு கப் அளவிற்கு நறுக்கிய பழுத்த தக்காளி பழங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அசத்தலான சுவையில் தக்காளி குழம்பு ஒரு முறை செய்து பாருங்கள் ஒரு பருக்கை கூட மிஞ்சாது…!

இப்பொழுது ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் காய்ந்ததும் ஒரு ஸ்பூன் கடுகு, கால் ஸ்பூன் பெருங்காயத்தூள், சிறிதளவு கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நாம் அரைத்து வைத்திருக்கும் விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். தக்காளியின் பச்சை வாசனை போனதும் மூன்றரை கப் அளவிற்கு தண்ணீர் சேர்க்க வேண்டும். இதனை மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும். குறைந்தது ஐந்து நிமிடங்கள் இந்த சட்னி நன்கு கொதிக்க வேண்டும்.

சட்னி ஐந்து நிமிடங்கள் நன்கு கொதித்ததும் கால் கப் அளவு இட்லி மாவுடன் முக்கால் கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்து அந்த மாவு கரைசலை சட்னியுடன் சேர்த்து கரைத்து விட வேண்டும். இதுதான் அந்த சட்னியின் ரகசியம். மாவினை சட்னியுடன் கரைத்ததும் கால் ஸ்பூனிற்கும் குறைவாக வெல்லத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனை மிதமான தீயில் வைத்து மூடி போட்டு ஐந்து நிமிடங்கள் நன்கு கொதிக்க விட வேண்டும். சட்னி நன்கு கொதித்ததும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கி விடலாம். அவ்வளவுதான் கையேந்தி பவன் தக்காளி சட்னி அசத்தலாக தயாராகி விட்டது.

Exit mobile version