டேஸ்டியான பன்னீர் மசாலா சுலபமாக இப்படி செய்து பாருங்கள்…!

பன்னீர் மசாலா சுவை நிறைந்த ஒரு ரெசிபியாகும். சப்பாத்தி, பரோட்டா, நெய் சாதம் என அனைத்திற்கும் இந்த பன்னீர் மசாலா அட்டகாசமாக இருக்கும். பன்னீர் புரதச்சத்துக்கள் நிறைந்துள்ள ஒரு உணவு பொருளாகும். மேலும் பன்னீரில் அதிக அளவு ஜிங்க் இருப்பதால் இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் பன்னீரில் உடலுக்குத் தேவையான விட்டமின்கள் நிறைந்துள்ளது. இந்த சத்துக்கள் நிறைந்த பன்னீரை வைத்து சுவையான பன்னீர் மசாலா எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம். ‌‌

சூடான பன்னீர் 65 இந்த மழைக்காலத்தில் செய்து ருசித்து மகிழுங்கள்!

பன்னீர் மசாலா செய்வதற்கு ஒரு கடாயில் மூன்று டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் ஒரு பிரியாணி இலை, ஒரு துண்டு பட்டை, இரண்டு கிராம்பு, இரண்டு ஏலக்காய், ஒரு டீஸ்பூன் சீரகம் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும். இவற்றை தாளித்த பிறகு இரண்டு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். வெங்காயத்துடன் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு இஞ்சி பூண்டு விழுதையும் சேர்க்கவும். இவற்றை நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கி பொன்னிறமானதும் இதற்கு தேவையான மசாலாக்களை சேர்க்கலாம். ஒரு டீஸ்பூன் கரம் மசாலா, இரண்டு டீஸ்பூன் மல்லித்தூள், 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து அவற்றின் பச்சை வாசனை போக நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.

வாவ்… அருமையான சுவை நிறைந்த பாலக் பன்னீர்…! இப்படி செய்து பாருங்கள்..

இப்பொழுது பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய தக்காளி பழங்களை சேர்த்து அதையும் நன்கு வதக்கவும். சிறிதளவு தண்ணீர் விட்டு இதனை மூடி போட்டு வேக விடவும். தக்காளி நன்கு வெந்து மென்மையாக குழையும் அளவிற்கு இதனை வேக விட வேண்டும். தக்காளி வெங்காயம் நன்கு வெந்து குழைந்து வந்ததும் இப்பொழுது இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு தயிர் சேர்த்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்து இந்த நிலையில் தண்ணீர் தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம். அனைத்தையும் நன்கு கலந்து 200 கிராம் அளவு பன்னீரை துண்டுகளாக நறுக்கி இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது அனைத்தையும் நன்கு கிளறி ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி தழை தூவி இறக்கி விடலாம். அவ்வளவுதான் சுவையான பன்னீர் மசாலா தயாராகி விட்டது…!

Exit mobile version