ப்ரைட் ரைஸ் அனைத்து விதமான உணவகங்களிலும் கிடைக்கக்கூடிய ஒரு உணவு. ஆனால் விலை உயர்ந்த உணவகங்களை விட ரோட்டு கடையில் விற்கும் சிக்கன் பிரைடு ரைஸ்க்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. சிக்கன் பிரியராக இருந்தால் நிச்சயம் அவர்களுக்கு இந்த சிக்கன் பிரைடு ரைஸ் பிடிக்கும். இதன் சுவை அத்தனை அட்டகாசமாக இருக்கும். இதற்கு சைட் டிஷ் எதுவும் தேவைப்படாது. வாருங்கள் சுவையான இந்த சிக்கன் பிரைடு ரைஸ் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
சிக்கன் ப்ரைட் ரைஸ் செய்வதற்கு ஒரு அரை கிலோ அளவு எலும்பு இல்லாத சிக்கனாக பார்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். இதனுடன் ஒரு டீஸ்பூன் உப்பு, ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும். காரத்திற்கு இரண்டு டீஸ்பூன் மிளகாய் தூள் சேர்க்கலாம். இவற்றோடு ஒரு டீஸ்பூன் தனியாத்தூள், ஒரு டீஸ்பூன் சீரகத்தூள், ஒரு டேபிள் ஸ்பூன் சோள மாவு, ஒரு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு, 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை சேர்க்கவும்.
ரெஸ்டாரன்ட் சுவையிலேயே அட்டகாசமான எக் ப்ரைட் ரைஸ் இப்படி செய்து பாருங்கள்…!
பிறகு அரை எலுமிச்சம் பழத்தை பிழிந்து அதன் சாறை சேர்த்துக் கொள்ளவும். இவை அனைத்தையும் நன்றாக கலக்க வேண்டும். இறுதியாக ஒரு முட்டையை உடைத்து ஊற்றி அதையும் நன்றாக கலந்து விடவும். அனைத்தையும் சிக்கனில் கலந்த பிறகு இதை ஒரு மணி நேரம் அப்படியே வைத்து விட வேண்டும். நன்றாக சிக்கனில் இந்த மசாலாக்கள் ஊற வேண்டும். அதுவரை சிக்கனை அப்படியே வைத்துவிடலாம்.
சிக்கன் ஒரு மணி நேரம் நன்றாக ஊறியதும். ஒரு கடாயில் இதனை பொறிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் சூடானதும் நாம் பிசைந்து வைத்திருக்கும் சிக்கனை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பொரிக்கவும். சிக்கன் நன்கு சிவந்து வெந்து வரும் வரை இதனை பொரித்து எடுத்துக் கொள்ளவும். பிறகு ஒரு டிஷ்யூ பேப்பரில் சேர்த்து சிறிது எண்ணெயை வடித்து கொள்ளலாம். பொரித்து எடுத்த சிக்கன்களை வாயில் கடிபடும் அளவிற்கு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
இப்பொழுது ஒரு அகலமான கடாயை எடுத்துக் கொள்ளவும். இதில் இரண்டு மேசை கரண்டி அளவிற்கு எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் காய்ந்ததும் பொடியாக நறுக்கிய ஒரு மேசை கரண்டி பூண்டை சேர்க்கவும். பிறகு பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய்களை சேர்க்கவும். ஒரு பெரிய வெங்காயத்தை மெல்லிசாக நீளவாக்கில் நறுக்கி அதையும் சேர்க்க வேண்டும். அனைத்தையும் நன்றாக வதக்க வேண்டும். குறைந்தது ஒரு நிமிடம் வரை இதனை வதக்கி விட வேண்டும்.
இதனுடன் ஒரு கப் அளவு பீன்ஸ், ஒரு கப் கேரட், பாதி குடை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு கப் அளவு முட்டைக்கோசை மெல்லியதாக நறுக்கி அதையும் சேர்க்கவும். காய்கறிகள் அனைத்தையும் வதக்கி விட வேண்டும். காய்கறிகளுடன் ஒரு டீஸ்பூன் அளவு உப்பு, ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள், 2 டீஸ்பூன் ரெட் சில்லி ஃப்ளேக்ஸ், 2 டீஸ்பூன் சோயா சாஸ் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
ஒரு பவுலில் இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி அதனுடன் உப்பு மற்றும் மிளகு சேர்த்து அடித்துக் கொள்ளவும். நாம் வதக்கி வைத்திருக்கும் காய்கறிகள் நடுவில் லேசாக குழி போல பறித்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து உடைத்த முட்டையை ஊற்றி விட வேண்டும். ஒரு சில நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து முட்டை வெந்ததும் காய்கறிகளுடன் சேர்த்து கலந்து விட வேண்டும். இரண்டும் நன்றாக கலந்ததும் நாம் ஏற்கனவே பொரித்து எடுத்து நறுக்கி வைத்திருக்கும் சிக்கன் துண்டுகளை சேர்த்து கலந்து விடலாம்.
அனைத்தையும் நன்றாக கலந்ததும் உதிரியாக வேக வைத்து எடுத்த பாஸ்மதி அரிசியை சேர்த்துக் கொள்ளலாம். சாதம் அதிகம் குழையாமல் உதிரியாக வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அனைத்தையும் ஒரு சேர கலந்த விட்டு இறுதியாக பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் கலந்து இறக்கலாம். வெங்காயத்தாள் கிடைக்கவில்லை என்றால் கொத்தமல்லி தலையை பொடியாக நறுக்கி தூவி இறக்கினால் அட்டகாசமான சிக்கன் பிரைடு ரைஸ் ரோட்டு கடை ஸ்டைலில் தயாராகிவிட்டது.