ஈஸியாக வீட்டில் செய்யலாம் ஹோட்டல் சுவையில் அட்டகாசமான பிஸிபேளாபாத்!

பிஸிபேளாபாத் பலருக்கும் பிடித்தமான ஒரு உணவு வகையாகும். அரிசி, பருப்பு, காய்கறிகள் என அனைத்தும் சேர்த்து ஒன் பாட் சாதமாக செய்யும் இந்த பிசிபேளாபாத் சைவ அசைவ பிரியர்களுக்கு மிகப் பிடித்தமான உணவு என்று சொல்லலாம். இதில் வீட்டிலேயே மசாலாக்கள் அரைத்து சேர்ப்பதால் இதன் சுவை மிக நன்றாக இருக்கும். பெரும்பாலும் இந்த பிஸிபேளாபாத்தை உணவகங்களில் தான் அனைவரும் விரும்பி உண்பார்கள். காரணம் வீட்டில் என்னதான் முயற்சி செய்தாலும் உணவகத்தில் கிடைக்கும் சுவைக்கு ஈடாகாது. ஆனால் இனி கவலை படாதீர்கள். இதே போல் மசாலா அரைத்து செய்து பாருங்கள். உணவகத்தில் கிடைக்கும் பிஸிபேளாபாத்தை விட நீங்கள் வீட்டில் செய்யும் பிசிபேளாபாத் கூடுதல் சுவையாக இருப்பதை உணர்வீர்கள். வாருங்கள் இந்த பிசிபேளாபாத் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

இந்த பிஸிபேளாபாத் செய்வதற்கு முதலில் ஒரு டம்ளர் அளவு அரிசி எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் முக்கால் டம்ளர் அளவு துவரம் பருப்பை சேர்த்து இரண்டையும் நன்றாக அலசிக் கொள்ளுங்கள். இதனை அரை மணி நேரம் ஊற வையுங்கள். பிறகு ஒரு வானலியில் ஒரு மேசை கரண்டி அளவிற்கு கடலைப்பருப்பு, ஒரு மேசை கரண்டி உளுத்தம் பருப்பு, ஒரு தேக்கரண்டி முழு மல்லி விதை, ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி எள்ளு, அரை தேக்கரண்டி மிளகு, ஒரு சிறிய துண்டு பட்டை, இரண்டு கிராம்பு, ஒரு தேக்கரண்டி அளவிற்கு கசகசா, கால் தேக்கரண்டி வெந்தயம் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். இவற்றோடு ஐந்து வர மிளகாய்களை சேர்க்கவும். உங்களுக்கு காரம் கூடுதலாக வேண்டும் என்றால் மிளகாய்களில் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளலாம்.

இப்பொழுது நாம் சேர்த்த மசாலாக்கள் அனைத்தையும் நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். மசாலாக்களின் நிறம் மாறும் வரை நன்றாக வறுத்து இறுதியாக இரண்டு டீஸ்பூன் அளவிற்கு தேங்காய் துருவலை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதையும் சிறுது நேரம் வறுத்துக் கொள்ளவும். இப்பொழுது இவை அனைத்தையும் ஆற விடவும். ஆறிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு பொடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த மசாலாக்களை மொத்தமாக அரைத்தும் வைத்துக் கொள்ளலாம். இது ஆறு மாதம் வரை கெடாமல் அப்படியே இருக்கும். இந்த மசாலா தான் பிசிபேளாபாத்திற்கு சுவையும் மணமும் அதிகரித்து தரக்கூடிய மசாலா. கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ் என உங்களுக்கு விருப்பமான காய்கறிகளை நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

ஒரு குக்கரில் 6 டம்ளர் அளவிற்கு தண்ணீர் சேர்க்கவும் தண்ணீர் நன்கு கொதித்ததும் நாம் ஏற்கனவே ஊற வைத்திருக்கும் அரிசி மற்றும் பருப்பை சேர்க்கவும். இதனுடன் நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகளை சேர்த்து ஒரு டீஸ்பூன் அளவிற்கு மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்துக் கொள்ளவும். குக்கரை மூடி நான்கு விசில் வரும் வரைக்கும் வைக்கவும். இந்த சாதம் நன்கு குழைந்து இருந்தால் தான் நன்றாக இருக்கும். நான்கு விசில் வந்த பிறகு குக்கரில் உள்ள பிரஷர் முழுமையாக வெளியேறியதும் குக்கரை திறந்து சாதத்தை நன்கு கிளறி கொள்ளவும்.

இப்பொழுது இந்த சாதத்துடன் நன்கு பழுத்த ஒரு தக்காளி பழத்தை நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். எலுமிச்சை அளவு புளியை ஊறவைத்து அந்த புளித்தண்ணீரையும் சேர்த்து நாம் ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் மசாலாவை இப்பொழுது சேர்க்கவும். இந்த நிலையில் உப்பு தேவைப்பட்டால் சிறிதளவு சேர்த்துக் கொள்ளலாம். இறுதியாக ஒரு சிறிய துண்டு வெல்லம் சேர்க்கவும். இதனை நன்றாக கிளறி கொள்ளவும். இதனுடன் ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் வைத்து 5 நிமிடங்கள் வரை கொதிக்க விட வேண்டும்.

பிறகு தனியாக ஒரு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்துக் கொள்ளவும். நெய் உருகியதும் அதில் முந்திரி பருப்புகளை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு தேக்கரண்டி கடுகு, இரண்டு வர மிளகாய், ஒரு கொத்து கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து இவற்றோடு பத்து சின்ன வெங்காயத்தையும் வதக்கி கொள்ளவும். இந்த தாளிப்பை வேகவைத்த சாதத்துடன் சேர்த்து சில நிமிடங்கள் கிளறி இறக்கினால் அட்டகாசமான பிஸிபேளாபாத் தயார்.

Exit mobile version