மொறு மொறு சேப்பங்கிழங்கு வறுவல் இப்படி செய்து பாருங்கள்…!

சேப்பங்கிழங்கு வைத்து மொறு மொறுப்பான வறுவல் செய்தால் அதன் சுவை அருமையாக இருக்கும். ரசம் சாதம், தயிர் சாதம், சாம்பார் சாதம் என அத்தனைக்கும் பொருத்தமான இந்த சேப்பங்கிழங்கு வறுவல் கறி சுவையை மிஞ்சும் அளவிற்கு சுவையானதாக இருக்கும். இந்த சேப்பங்கிழங்கை வைத்து அட்டகாசமான சேப்பங்கிழங்கு வறுவல் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

சேப்பங்கிழங்கு வறுவல் செய்வதற்கு முதலில் அரை கிலோ அளவு சேப்பங்கிழங்கை தண்ணீரில் நன்றாக அலச வேண்டும். தண்ணீரில் அலசி சுத்தம் செய்த பிறகு ஒரு பாத்திரத்தில் சேப்பங்கிழங்கை வேக வைக்க தேவையான அளவு தண்ணீர் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து இதனை வேக விட வேண்டும். குக்கரில் வேக வைக்க ஒரு விசில் வரும் வரை வைத்தால் போதும். பாத்திரத்தில் வேகவைக்கும் பொழுது 20 நிமிடங்கள் வேக விடவும். சேப்பங்கிழங்கு வெந்ததும் இதனை தனியாக எடுத்து ஆற விடவும். பிறகு அதன் தோலை நீக்கி வட்ட வடிவில் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

கல்யாண வீட்டு சுவையில் உருளைக்கிழங்கு பால் கறி இப்படி செய்து பாருங்கள்…!

இப்பொழுது ஒரு பவுலில் இரண்டு டீஸ்பூன் அளவிற்கு உப்பு, அரை டீஸ்பூன் மஞ்சள் தூள், மூன்று டீஸ்பூன் மிளகாய் தூள், இரண்டு டீஸ்பூன் தனியாத்தூள், 2 டீஸ்பூன் சீரகத்தூள், அரை டீஸ்பூன் பெருங்காயத்தூள், இரண்டு டீஸ்பூன் அரிசிமாவு, 2 டீஸ்பூன் கடலை மாவு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது நாம் கலந்து வைத்திருக்கும் மசாலாவை நறுக்கிய சேப்பங்கிழங்குடன் சேர்த்து அனைத்து சேப்பங்கிழங்குகளிலும் இந்த மசாலாக்கள் படும் படி புரட்டி எடுத்துக் கொள்ளவும். இது சிறிது நேரம் ஊற வேண்டும். எனவே ஐந்து நிமிடங்கள் இதனை மூடி போட்டு அப்படியே வைத்து விடவும்.

இப்பொழுது ஒரு கடாயில் மூன்று டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். எண்ணெய் சூடானதும் அதில் சிறிதளவு கறிவேப்பிலை மற்றும் இடித்த பூண்டை சேர்த்து கொள்ள வேண்டும். பிறகு நாம் நறுக்கி மசாலாக்கள் சேர்த்து வைத்திருக்கும் சேப்பங்கிழங்கை கடாயில் சேர்த்து மிதமான தீயில் வைத்து வேக விட வேண்டும். சேப்பக்கிழங்கு உடைந்து விடாமல் பொறுமையாக வேக வைத்து எடுக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான மொறுமொறுப்பான சேப்பங்கிழங்கு வறுவல் தயார். இதனை அப்படியே சாப்பிட்டாலும் நன்றாக இருக்கும்.

Exit mobile version