மாவு தீர்ந்து போயிடுச்சா? கவலை வேண்டாம்… ரவை இருந்தால் போதும் சூடான ரவை இட்லி செய்யலாம்!

இட்லி பலருக்கும் பிடித்தமான காலை உணவு. இந்த இட்லியையே நாம் பல வகைகளில் செய்ய முடியும். அப்படி ஒரு இட்லி வகை தான் ரவை இட்லி. வீட்டில் மாவு தீர்ந்து விட்டால் சட்டென்று இந்த ரவை இட்லியை செய்து அசத்தலாம். செய்வதற்கும் சுலபமானது சுவையும் அருமையாக இருக்கும். இதை செய்வதற்கும் அதிக பொருட்கள் தேவையில்லை. வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே செய்ய முடியும்.

ரவை இட்லி செய்ய முதலில் ஒரு கடாயில் மூன்று ஸ்பூன் அளவு நெய்யை காய வைத்து அதில் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு, சிறிதளவு கறிவேப்பிலை, இரண்டு பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், ஒரு பொடியாக நறுக்கிய இஞ்சி ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது கால் கிலோ அளவு ரவையை இதில் கொட்டி நன்றாக வறுக்க வேண்டும்.

அடுப்பை குறைவான தீயில் வைத்து இந்த ரவையை வறுக்கவும். வாசம் வரும் வரை கைவிடாமல் வறுக்க வேண்டும். இப்பொழுது ரவை வறுபட்டதும் இதனை ஒரு தட்டில் கொட்டி ஆற விட வேண்டும். 300 மில்லி லிட்டர் அளவு தயிரில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக கடைந்து கொள்ள வேண்டும். தட்டில் ஆற வைத்திருக்கும் ரவையை இந்த தயிரில் கொட்டி 15 நிமிடங்கள் அப்படியே மூடி போட்டு மூடி வைக்க வேண்டும்.

ரவை தயிரில் நன்கு ஊற வேண்டும். 15 நிமிடங்கள் ஊறிய பிறகு மாவு கெட்டியாக இருந்தால் கூடுதலாக தயிர் ஊற்றிக் கொள்ளலாம் இல்லை இட்லி மாவு பதத்தில் இருந்தால் இதனை நன்றாக கலக்கி அப்படியே இட்லி ஊற்றலாம். இந்த ரவா இட்லி மாவில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து செய்தால் இட்லி நல்ல மிருதுவாக இருக்கும்.

அவ்வளவுதான் சுவையான ரவா இட்லி தயார். இதனை சூடாக கொத்தமல்லி சட்னியுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும்!

Exit mobile version