சாதத்திற்கு இப்படி உருளைக்கிழங்கு வறுவல் செஞ்சீங்கன்னா கொஞ்சம் கூட மிஞ்சாது…!

தயிர் சாதம், ரசம் சாதம் போன்ற சாதங்களுக்கு என்ன தான் விதவிதமாக சைடிஷ் செய்தாலும் உருளைக்கிழங்கு வறுவலுக்கு ஈடு இணை கிடையாது. மொறுமொறுவென்று காரசாரமான இந்த உருளைக் கிழங்கு வறுவல் வைத்து சாப்பிட்டால் நீங்கள் எவ்வளவு சாப்பிட்டீர்கள் என்று உங்களுக்கே தெரியாது. அந்த அளவிற்கு இதன் சுவை அட்டகாசமாக இருக்கும். வாருங்கள் உருளைக்கிழங்கை வைத்து எப்படி மொறு மொறு வென்ற உருளைக்கிழங்கு வறுவல் செய்வது என்பதை பார்க்கலாம்.

உருளைக்கிழங்கு வறுவல் செய்வதற்கு இரண்டு பெரிய உருளைக்கிழங்கை எடுத்து அதனை தோல் சீவி நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது நறுக்கிய உருளைக்கிழங்கை ஒரு பவுலில் சேர்த்து இதனுடன் கால் ஸ்பூனிற்கும் குறைவாக மஞ்சள் தூள் மற்றும் ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு கடாயில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் காய்ந்ததும் சிறிதளவு கடுகு மற்றும் அரை டீஸ்பூன் சோம்பு சேர்த்து பொரித்துக் கொள்ள வேண்டும்.

கடுகு மற்றும் சோம்பு பொறிந்ததும் நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கை சேர்த்து எண்ணெயில் நன்றாக வதக்க வேண்டும். உருளைக்கிழங்கு பாதி வெந்ததும் நாம் நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய பாதி பெரிய வெங்காயத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது வெங்காயம் மற்றும் உருளை கிழங்கு முழுமையாக வதங்கி வேகும் வரை வதக்கி விட வேண்டும். இந்த நிலையில் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம். வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு நன்கு வதங்கிய பிறகு இறுதியாக அரை டீஸ்பூன் சோம்பு மற்றும் சிறிதளவு கறிவேப்பிலை தூவி லேசாக கிளறி இறக்கி விடலாம்.

அவ்வளவுதான் அட்டகாசமான சுவையில் உருளைக்கிழங்கு வறுவல் தயாராகி விட்டது இதனை அனைத்து வகையான சாதத்திற்கும் சைடிஷ் ஆக சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.

Exit mobile version