மழைக்காலத்தில் சூடா செஞ்சு சாப்பிடுங்க சுவையான உருளைக்கிழங்கு போண்டா…!

மழைக்காலம் வந்து விட்டாலே சூடான தேனீர் அதனோடு பஜ்ஜி அல்லது போண்டா இவற்றை வைத்து சாப்பிடுவது என்றால் பலருக்கும் பிடித்தமான ஒரு செயல். கடைகளில் விற்கப்படும் பஜ்ஜியோ, போண்டாவோ உடலுக்கு அவ்வளவு நல்லதல்ல. அது எந்த எண்ணெயில் செய்யப்படுகிறது? சுகாதாரமான முறையில் செய்யப்படுகிறதா? என்பது நமக்குத் தெரியாது. எனவே சுவையான போண்டாவை நாமே வீட்டில் அட்டகாசமாக தயார் செய்ய முடியும். அதுவும் உருளைக்கிழங்கை வைத்து செய்யும் இந்த போண்டா அனைவருக்கும் மிகப் பிடித்தமானதாக இருக்கும். வாருங்கள் இந்த சுவையான உருளைக்கிழங்கு போண்டாவை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

மாலை நேர சிற்றுண்டிக்கு மொறுமொறு கார்ன் போண்டா இப்படி செய்து பாருங்கள்..!

உருளைக்கிழங்கு போண்டா செய்வதற்கு முதலில் அரை கிலோ அளவு உருளைக்கிழங்கு எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த உருளைக்கிழங்கை வேக வைத்து இதன் தோலை உரித்து இதனை உதிர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் நான்கு தேக்கரண்டி எண்ணெயை காய வைத்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் இதனுடன் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும். அரை ஸ்பூன் சீரகம் சிறிதளவு கறிவேப்பிலை ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் சேர்த்த பிறகு பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். ஒரு சிறிய துண்டு இஞ்சியை தட்டி இதனுடன் சேர்த்து அதையும் நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். 5 பச்சை மிளகாய்களை பொடியாக நறுக்கி வதக்கி விட வேண்டும். இவை அனைத்தும் நன்கு வதங்கிய பிறகு நாம் உதிர்த்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை சேர்த்து தேவையான அளவு உப்பு சிறிதளவு மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி இறக்கி விட வேண்டும். இதனை சிறிது நேரம் ஆறவிடவும்.

இதற்கு வெளி மாவு தயார் செய்வதற்கு ஒரு கிண்ணத்தில் ஒரு கப் கடலை மாவு, இரண்டு மேசை கரண்டி அரிசி மாவு, இரண்டு மேசை கரண்டி மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் விட்டு நன்கு கரைத்துக் கொள்ள வேண்டும். பஜ்ஜி மாவு போன்ற பதத்திற்கு இதனை கரைத்துக் கொள்ளவும். பிறகு நாம் ஏற்கனவே தயார் செய்து வைத்த உருளைக்கிழங்கை எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். இந்த உருண்டைகளை மாவில் நனைத்து எண்ணையை காய வைத்து இதனை பொறித்து எடுக்க வேண்டும். நல்ல அகலமான வாணலியில் நான்கு அல்லது ஐந்து உருண்டைகளாக போட்டு திருப்பி விட்டு வெந்ததும் எடுக்க வேண்டும்.

அவ்வளவுதான் சுவையான உருளைக்கிழங்கு போண்டா தயார்…!

Exit mobile version