ஆரோக்கியமான உடல் பெற மாதம் ஒருமுறை இந்த குழம்பை சாப்பிட்டால் போதும்…! உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பிரண்டை குழம்பு!

உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கக்கூடிய ஒரு உணவு பொருள் பிரண்டை. இந்த பிரண்டை நீர் நிறைந்த பகுதிகளில் அதிகம் காணப்படும். இந்த பிரண்டையை வைத்து துவையல், குழம்பு என பல ரெசிபிகளை செய்ய முடியும். பிரண்டை மூட்டு வலி முதலிய பிரச்சனைகளை நீக்கி உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தருகிறது. பசியை தூண்டக்கூடிய தன்மை பிரண்டைக்கு அதிகம் உள்ளது. இந்த பிரண்டையை மாதம் ஒருமுறை சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை அதிகரிக்கும். வாருங்கள் இந்த பிரண்டை குழம்பு எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

பிரண்டை குழம்பு செய்வதற்கு முதலில் பிரண்டையின் ஓரப்பகுதியில் உள்ள நார்களை நீக்கி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது ஒரு கடாயில் நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் ஐந்து பல் பூண்டு, 25 மிளகு, அரை ஸ்பூன் சீரகம் ஆகியவற்றை சேர்க்கவும். இவற்றோடு சுத்தம் செய்து நறுக்கி வைத்திருக்கும் பிரண்டையை சேர்த்து எண்ணெயில் நன்கு வதக்க வேண்டும். பிரண்டை ஓரளவு வதங்கியதும் கால் ஸ்பூன் பெருங்காயத்தூள், ஐந்து கொத்து கறிவேப்பிலை, ஒரு கைப்பிடி அளவிற்கு தோல் உரித்த சின்ன வெங்காயம், நறுக்கிய இரண்டு தக்காளி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். இவை அனைத்தும் நன்கு வதங்கி மென்மையான பிறகு இதனை அடுப்பில் இருந்து இறக்கி ஆற விடவும். எண்ணெய் வடித்து இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும். இதனுடன் மூன்று கீற்று தேங்காய் சில்லு சேர்த்த சிறிதளவு தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கும் பிரண்டை சட்னி…!

இப்பொழுது அதே எண்ணெயில் அரை ஸ்பூன் கடுகு, கால் ஸ்பூன் சீரகம், சிறிதளவு வெந்தயம், இரண்டு கொத்து கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்க்க வேண்டும். இவை பொறிந்ததும் பத்து பல் பூண்டு, 15 சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். சின்ன வெங்காயத்தை இரண்டாக நறுக்கி சேர்த்தால் போதுமானது. இவற்றோடு குழம்புக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து, குழம்பு மிளகாய்த்தூள் இரண்டரை ஸ்பூன் சேர்த்துக் கொள்ளவும். இவை அனைத்தையும் நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கி மிளகாய் தூள் பச்சை வாசனை போன பிறகு நாம் அரைத்து வைத்திருக்கும் விழுதை சேர்க்க வேண்டும். விழுது எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கி விடவும். பிறகு நெல்லிக்காய் அளவு புளியை ஊறவைத்து கரைத்து அந்த புளித்தண்ணீரை இதனுடன் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். குழம்பு மூடி போட்டு எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும். சில நிமிடங்கள் நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும் இதனை இறக்கி விடலாம். அவ்வளவுதான் சூடான உடல் நலத்திற்கு ஆரோக்கியம் தரக்கூடிய பிரண்டை குழம்பு தயார்.

Exit mobile version