பீர்க்கங்காய் நார்ச்சத்து, நீர்ச்சத்து நிறைந்த காய் வகையாகும். உடலுக்குத் தேவையான இந்த சத்துக்களை உள்ளடக்கிய பீர்க்கங்காய் சுவையிலும் அட்டகாசமாக இருக்கும். பீர்க்கங்காய் வைத்து துவையல், பொரியல், குழம்பு என பல ரெசிபிக்கள் செய்ய முடியும். இப்பொழுது பீர்க்கங்காய் வைத்து சுவையான பீர்க்கங்காய் குழம்பு எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
பீர்க்கங்காய் குழம்பு செய்வதற்கு முதலில் பிஞ்சு பீர்க்கங்காயாக பார்த்து நானூறு கிராம் அளவு எடுத்துக் கொள்ளவும். இதன் தோலை சீவி துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் அளவுக்கு எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு சேர்த்துக் கொள்ள வேண்டும். சிறிதளவு கறிவேப்பிலை, நான்கு பல் பூண்டு, நறுக்கிய ஒரு பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். பூண்டு நன்கு வதங்க வேண்டும். பூண்டு வதங்கிய பிறகு பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கி மென்மையான பிறகு சிறிய அளவிலான இரண்டு தக்காளி பழங்களை மிக்ஸி ஜாரில் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்து அந்த விழுதை வெங்காயத்துடன் சேர்த்து வதக்க வேண்டும்.
தக்காளி வதங்கும் பொழுதே இதற்கான மசாலாக்களை சேர்த்துக் கொள்ளலாம். கால் ஸ்பூன் அளவிற்கு மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் மல்லித் தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். மசாலாக்கள் நன்கு வதங்கிய பிறகு நாம் நறுக்கி வைத்திருக்கும் பீர்க்கங்காயை சேர்த்து எண்ணெயில் சிறிது நேரம் வதக்கி விட வேண்டும். கால் டம்ளர் அளவிற்கு தண்ணீர் சேர்த்து இதனை மூடி போட்டு வேக விடவும். பீர்க்கங்காய் தண்ணீர் விடும் என்பதால் அதிக தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.
இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரில் மூன்று டேபிள் ஸ்பூன் அளவிற்கு தேங்காய் துண்டுகள், இரண்டு ஸ்பூன் பொட்டுக்கடலை, சிறிய நெல்லிக்காய் அளவு புளி, அரை ஸ்பூன் சீரகம் ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். பீர்க்கங்காய் வெந்ததும் நாம் தயார் செய்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை சேர்த்து மூடி போட்டு 10 நிமிடங்கள் நன்கு கொதிக்க விடவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். குழம்பு நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கிவிடலாம். அவ்வளவுதான் சுவையான பீர்க்கங்காய் குழம்பு அட்டகாசமாக தயாராகி விட்டது.