வாவ்… அருமையான சுவை நிறைந்த பாலக் பன்னீர்…! இப்படி செய்து பாருங்கள்..

பாலக் பன்னீர் இந்தியாவின் பிரபலமான ஒரு ரெசிபி வகையாகும். பாலக்கீரை மற்றும் பன்னீர் வைத்து செய்யக்கூடிய இந்த பாலக் பன்னீர் சாதம், நாண், சப்பாத்தி என அனைத்து உணவுகளுக்கும் அட்டகாசமான காம்பினேஷன் ஆக இருக்கும். மேலும் பாலக் கீரை என்று சொல்லக்கூடிய பசலைக் கீரை உடலுக்கும் நன்மை தரக்கூடியது. உடல் எலும்புகளை வலுப்படுத்திடவும், இரத்த சோகையை நீக்கவும் உதவி செய்கிறது. மேலும் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உணவில் தினமும் பாலக்கீரை சேர்த்துக் கொள்வது நல்லது. இந்தப் பாலக் கீரையுடன் பன்னீர் சேர்த்து எப்படி சுவையான பாலக் பன்னீர் செய்யலாம் என்பதை பார்ப்போம் வாருங்கள்.

பாலக் பன்னீர் செய்வதற்கு முதலில் 250 கிராம் அளவிற்கு பாலக்கீரை எடுத்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இதை இரண்டு முறை தண்ணீரில் நன்கு அலசிக் கொள்ளவும். இப்பொழுது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து தண்ணீர் நன்கு கொதித்ததும் நாம் சுத்தம் செய்து வைத்திருக்கும் கீரையை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வரை வேக விட வேண்டும். கீரை நன்கு மென்மையானதும் இதனை எடுத்து விடலாம். இப்பொழுது இந்தக் கீரையை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும். இதனுடன் ஒரு துண்டு இஞ்சி நறுக்கி சேர்க்கவும், 4 பச்சை மிளகாய்களை நறுக்கி சேர்க்கவும். இதனை மைய அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு கடாயில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு வெண்ணெய் சேர்க்கவும். இதனுடன் ஒரு பட்டை, இரண்டு கிராம்பு, ஒரு ஏலக்காய், 1/2 ஸ்பூன் சீரகம் ஆகியவற்றை சேர்த்து அதனுடன் பொடியாக நறுக்கிய இரண்டு பூண்டு பற்களையும் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். இவற்றை வதக்கும் பொழுதே பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கியதும் இதனுடன் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 டீஸ்பூன் மல்லித்தூள், 1/2 ஸ்பூன் கரம் மசாலா, அரை ஸ்பூன் மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பிறகு ஒரு தக்காளியையும் பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் மற்றும் தக்காளி நன்கு வதங்கி மென்மையானதும் நாம் ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் கீரையை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும்.

இப்பொழுது கீரையை கடாயை மூடாமலேயே சமைக்க வேண்டும். கீரை சமைக்கும் பொழுது எப்பொழுதும் மூடி சமைக்கக் கூடாது. இதற்கு தண்ணீர் தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கீரையை வேக விட வேண்டும். இப்பொழுது இரண்டு மேசை கரண்டி அளவிற்கு கிரீம் சேர்த்துக் கொள்ள வேண்டும். கிரீம் இல்லை என்றால் முந்திரிப்பருப்பை ஊறவைத்து அரைத்து அதனை சேர்த்துக் கொள்ளலாம். இறுதியாக 250 கிராம் அளவு பன்னீரை சதுர வடிவில் நறுக்கி அதை சேர்த்து ஒரு கிளறு கிளற வேண்டும். அனைத்தும் ஒன்று சேர கிளறியதும் இறக்கிவிடலாம். அவ்வளவுதான் அட்டகாசமான பாலக் பன்னீர் தயாராகி விட்டது…!

Exit mobile version