சட்டென்று செய்யலாம் இந்த வெங்காய சாதம்.. ஈஸி லஞ்ச் பாக்ஸ் ரெசிபி…!

காலை உணவு அல்லது லஞ்ச் பாக்ஸ் இவற்றிற்கு ஏற்ற ஒரு ஈஸியான ரெசிபி தான் வெங்காய சாதம். லஞ்ச் பாக்ஸ் ரெசிபி பெரும்பாலும் எளிமையாக செய்யக்கூடிய ஒன்றாக இருக்க வேண்டும் என்று தான் பலரும் விரும்புவார்கள். அப்பொழுதுதான் காலை நேரத்தில் அதிக பரபரப்பு இல்லாமல் சமைக்க முடியும். அப்படி ஒரு எளிமையான ரெசிபி தான் இந்த வெங்காய சாதம்.

இந்த வெங்காய சாதம் செய்வதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. சுலபமாக சட்டென்று செய்துவிடலாம். அதே சமயம் இதன் சுவையும் அத்தனை அட்டகாசமாக இருக்கும். ஏதேனும் வறுவல் உடன் வைத்து சாப்பிட்டால் இன்னும் நன்றாக இருக்கும். வாருங்கள் எந்த வெங்காய சாதம் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

அசத்தலான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி குழந்தைகளுக்கு பிடித்த வேர்க்கடலை சாதம்…!

இந்த வெங்காய சாதம் செய்வதற்கு சாதத்தை முன்னரே தேவையான அளவு வடித்து எடுத்துக் கொள்ளலாம். அதிக குழைவாக இல்லாமல் பதமாக சாதத்தை வடித்துக் கொள்ளவும். நடுத்தர அளவிலான மூன்று பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அரை டீஸ்பூன் அளவிற்கு வரும்படி இஞ்சி பூண்டு விழுதாக இடித்து வைத்துக் கொள்ளவும்.

இப்பொழுது ஒரு கடாயில் இரண்டு மேசை கரண்டி அளவிற்கு எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் சூடானதும் அதில் அரை டீஸ்பூன் சீரகம் சேர்த்துக் கொள்ளவும். இதனுடன் நறுக்கி வைத்திருக்கும் மூன்று பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். சிறிதளவு கருவேப்பிலை இலை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நாம் இடித்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து இதனை வதக்க வேண்டும். வெங்காயம் நிறம் மாறும் வரை இதனை வதக்க வேண்டும். வெங்காயம் நிறம் மாறி இஞ்சி பூண்டு விழுதின் பச்சை வாசனை போனதும் நாம் இந்த சாதத்திற்கு தேவையான மசாலாக்களை இதில் சேர்க்கலாம்.

அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு டீஸ்பூன் சாம்பார் தூள், சிறிதளவு மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து இதனை நன்றாக வதக்க வேண்டும். மசாலாக்கள் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் ஒரு அரை டம்ளர் அளவிற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பை குறைவான தீயில் வைத்து மூன்று நிமிடங்கள் இதனை வேக விடவும்.

பீட்ரூட் பிடிக்காதவர்களையும் விரும்பி சாப்பிட வைக்கும் பீட்ரூட் சாதம்…!

மூன்று நிமிடங்களுக்குப் பிறகு நாம் ஏற்கனவே வடித்து வைத்திருக்கும் சாதத்தை இதன் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். பிறகு கால் டீஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து இதனை நன்றாக கிளறி கொள்ளவும். இறுதியாக கொத்தமல்லி தழை தூவி கிளறி இறக்கிவிடலாம். இதனை சூடாக பரிமாறலாம் அவ்வளவுதான் சுவையான சூடான வெங்காய சாதம் தயார்.

Exit mobile version