கறி குழம்பு சுவையை மிஞ்சும் வகையில் அருமையான மீல் மேக்கர் குழம்பு…!

அசைவ குழம்பின் சுவையை மிஞ்சும் அளவிற்கு சைவத்தில் அட்டகாசமாக ஹோட்டல் சுவையில் குழம்பு வைக்க முடியும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம்! இது கறி குழம்பா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு சுவையான ஒரு சைவ குழம்பு மீல் மேக்கர் குழம்பு. சோயா சங்க் என்று அழைக்கக்கூடிய இந்த மீல்மேக்கர் வைத்து செய்யக்கூடிய இந்த குழம்பு அட்டகாசமாக இருக்கும். உணவகங்களில் கிடைக்கும் சுவையிலேயே இந்த அருமையான மீல் மேக்கர் குழம்பை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

ஈஸியா செய்யுங்க அருமையான சைட் டிஷ் மீல்மேக்கர் மசாலா…!

மீல் மேக்கர் குழம்பு செய்வதற்கு முதலில் மீல் மேக்கரை எடுத்து வெந்நீரில் போட்டு மூடி வைத்து விட வேண்டும். இந்த மீல் மேக்கர் குறைந்தது 20 நிமிடங்கள் வெந்நீரில் ஊற வேண்டும். வெந்நீரில் ஊறிய பிறகு இந்த மீல் மேக்கரை தண்ணீரைப் பழிந்து எடுத்து தனியாக வைத்து விடவும். பிறகு இதற்கான மசாலாவை தயார் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ஒரு கடாயில் இரண்டு மேசை கரண்டி அளவிற்கு முழு மல்லி, ஒரு சிறிய துண்டு பட்டை, நான்கு கிராம்பு, இரண்டு டீஸ்பூன் சீரகம், நான்கு முழு மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம் ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும். இவை நிறம் மாறும்வரை வறுபட்டதும் இவற்றுடன் ஆறு காய்ந்த மிளகாய் சேர்த்துக் கொள்ளவும். பிறகு அரை கப் அளவு தேங்காய் துருவல் சேர்த்து அதையும் நன்றாக வதக்கிக் கொள்ளவும். தேங்காயின் ஈரப்பதம் போனதும் இதனை அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும். இந்த மசாலாக்கள் ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு மைய அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது ஒரு கடாயில் இரண்டு மேசை கரண்டி அளவிற்கு எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் காய்ந்ததும் அரை டீஸ்பூன் சீரகம் சேர்க்கவும் பிறகு பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். ஒரு டீஸ்பூன் அளவு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதையும் பச்சை வாசனை போக வதக்கிக் கொள்ளவும். பிறகு பொடியாக நறுக்கிய இரண்டு தக்காளி பழங்களை சேர்த்து அது மென்மையாகும் வரை வதக்கி விடவும். இவற்றுடன் ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், கால் டீஸ்பூன் குறைவாக மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். ஊற வைத்திருக்கும் சோயா துண்டுகளை சேர்த்து கிளறி கொள்ளவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு அரைத்த மசாலா விழுதை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி இதனை மூடி போட்டு 10 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும். குழம்பு நன்கு கொதித்ததும் இறுதியாக கொத்தமல்லி தழை தூவி பரிமாறலாம். அவ்வளவுதான் சுவையான மீல் மேக்கர் குழம்பு தயார்.

Exit mobile version