உருளைக்கிழங்கு வைத்து ரெஸ்டாரன்ட் சுவையில் வித்தியாசமான ரெசிபி… மசித்த உருளைக்கிழங்கு!

மசித்த உருளைக்கிழங்கு அதாவது மாஷ்டு பொட்டேட்டோ என்று அழைக்கப்படும் இந்த ரெசிபி மேலை நாடுகளில் மிகப் பிரபலமான ஒரு சைட் டிஷ் ஆகும். பல்வேறு உணவகங்களிலும் இந்த ரெசிபியை நீங்கள் சுவைத்திருக்கலாம். உருளைக்கிழங்கு பிரியர்கள் அனைவருக்கும் இந்த ரெசிபி நிச்சயம் பிடிக்கும். வழக்கமான உருளைக்கிழங்கு ரெசிபிக்கள் உங்களுக்கு அழுத்து விட்டால் ஒரு முறை இந்த ரெசிபியை முயற்சி செய்து பாருங்கள்.

இந்த ரெசிபி வித்தியாசமாகவும் அதே சமயம் சுவை நிறைந்ததாகவும் இருக்கும். இது ஒரு வகையான சைட் டிஷ் ரெசிபி ஆகும். எனவே எந்த விதமான மெயின் கோர்ஸுடனும் இதனை சைட் டிஷ் ஆக பரிமாறலாம். வாருங்கள் உணவகங்களில் மட்டுமே கிடைக்கக்கூடிய மேலைநாட்டு பாணி ரெசிபியான மசித்த உருளைக்கிழங்கு ரெசிபியை எப்படி செய்யலாம் என்பதை இப்பொழுது நாம் பார்க்கலாம்.

இந்த மசித்த உருளைக்கிழங்கு ரெசிபி செய்வதற்கு ஐந்து பெரிய உருளைக்கிழங்காக பார்த்து தேர்வு செய்து கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கை தண்ணீரில் நன்றாக கழுவி விடவும். பிறகு அதன் தோலை நீக்கி நடுத்தர அளவில் துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கு வேக வைக்க தேவையான அளவு தண்ணீர் கொதிக்க வைக்கவும். அதில் சிறிதளவு உப்பு சேர்த்து நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கை சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.

உருளைக்கிழங்கு நன்கு வெந்து வரும் வரை அடுப்பில் வைக்கவும். சில நிமிடங்களுக்கு பிறகு உருளைக்கிழங்கு வெந்து இருக்கிறதா என்று பார்த்து உருளைக்கிழங்கு வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி விடலாம். இப்பொழுது வேகவைத்த உருளைக்கிழங்கை தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு உருளைக்கிழங்கை கட்டிகள் ஏதும் இல்லாதவாறு மசித்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு பேனில் கால் கப் அளவு காய்ச்சிய பாலை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் கால் கப் ஃப்ரெஷ் கிரீமையும் சேர்த்து கொள்ளவும். கால் டீஸ்பூன் அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். கால் டீஸ்பூன் மிளகுத்தூள் மற்றும் இடித்த மூன்று பூண்டு பற்களை சேர்த்து இதனை கொதிக்க விட வேண்டும். குறைவான தீயில் வைத்து மூன்று நிமிடங்கள் வரை இதனை கொதிக்க விடவும். மூன்று நிமிடங்களுக்குப் பிறகு இந்தப் பாலை வடிகட்டி எடுத்துக் கொள்ளலாம்.

இப்பொழுது நாம் மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்குடன் ஒரு மேசை கரண்டி அளவிற்கு வெண்ணையை உருக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு உப்பு இல்லாத வெண்ணையாக பார்த்து தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு தயார் செய்து வைத்திருக்கும் பாலையும் சேர்த்து அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். அவ்வளவுதான் மசித்த உருளைக்கிழங்கு தயார்.

Exit mobile version