இட்லி மீதமானால் கவலை வேண்டாம்… மீதமான இட்லி வைத்து சுவையான மசாலா இட்லி பிரை உப்புமா…!

வீட்டில் நாம் இட்லி சுடும்போது இட்லி மீதமாகி விட்டால் அதை வைத்து பெரும்பாலும் இட்லி உப்புமா செய்வோம். இட்லி உப்புமா பலருக்கும் பிடித்தமான ஒரு உணவு வகை தான். ஆனால் இதை உதிர்த்து இட்லி உப்புமாவை வழக்கம் போல் செய்யாமல் மசாலாக்கள் சேர்த்து மசாலா இட்லி ப்ரை உப்புமாவாக செய்தால் இன்னும் சுவையாக இருக்கும். அனைவருக்கும் பிடிக்கும் வகையில் வித்தியாசமான இந்த மசாலா இட்லி ப்ரை உப்புமாவை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

மசாலா இட்லி ப்ரை உப்புமா செய்வதற்கு முதலில் இரண்டு பெரிய வெங்காயம் மற்றும் நான்கு தக்காளிகளை நறுக்கி எடுத்துக் கொள்ளவும். எட்டு இட்லியை சதுர துண்டுகளாக நறுக்கி வைக்க வேண்டும். இரண்டு மேஜை கரண்டி கான்பிளவர் மாவுடன், அரை ஸ்பூன் மிளகாய்த்தூள், மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்க வேண்டும்.

கடாயை அடுப்பில் வைத்து இட்லி பொரிக்க தேவையான அளவு எண்ணெயை காய வைத்துக் கொள்ளவும். எண்ணெய் காய்ந்ததும் நறுக்கி வைத்திருக்கும் இட்லி துண்டுகளை மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்க வேண்டும். வெந்ததும் எண்ணெயை வடித்து எடுத்து ஆற வைக்க வேண்டும். இப்படி அனைத்து இட்லி துண்டுகளையும் பொறித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இட்லி துண்டுகளை பொரித்து எடுத்த பிறகு கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் மட்டும் காய வைத்து அதில் ஒரு சிறிய துண்டு பட்டை, இரண்டு கிராம்பு, ஒரு பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இவற்றை தாளித்த பிறகு நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். பிறகு தக்காளியையும் சேர்த்து வதக்கவும். வெங்காயம் தக்காளி நன்கு வதங்கி மென்மையானதும் இரண்டு ஸ்பூன் அளவு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு கால் ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து குறைவான தீயில் வைத்து நன்றாக வதக்க வேண்டும். பச்சை வாசனை போன பிறகு பொரித்து எடுத்த இட்லியை சேர்க்கவும். இட்லிகள் உடையாமல் மெதுவாக கிளற வேண்டும். ஐந்து நிமிடங்கள் குறைவான தீயில் வைத்து புரட்டி கிளறி விடவும். இறுதியாக கொத்தமல்லி தூவி இறக்கிவிடலாம்.

Exit mobile version