தோசை பிரியரா நீங்கள்? இதோ உங்களுக்காக மணமணக்கும் மசால் தோசை…!

மசாலா தோசை பிரபலமான தென்னிந்திய உணவுகளில் ஒன்று. கர்நாடகாவின் மங்களூருவில் தோன்றி இது தென்னிந்தியாவின் பிரபலமான உணவாக இருந்தாலும் உலகம் முழுவதும் பலரால் சுவைக்கப்பட்டு வருகிறது இந்த மசாலா தோசை. மொறுமொறுவென்ற தோசையின் உள்ளே மணமும் சுவையும் நிறைந்த மசாலாக்கள் கொண்ட உருளைக்கிழங்கை வைத்து தரப்படும் இந்த மசாலா தோசையின் சுவை மிகவும் அலாதியானது. உடுப்பி உணவகங்கள் வழியாக இது பலரையும் சென்றடைந்திருந்தாலும் இன்று பல்வேறு உணவகங்களிலும், சிறிய கடைகளிலும் கூட இந்த மசாலா தோசை கிடைக்கும். இந்த மசாலா தோசையை வீட்டிலேயே நாம் உணவகங்களில் கிடைக்கும் சுவையை விட அருமையாக செய்ய முடியும்.

தோசை மாவு தீர்ந்துடுச்சா கவலை வேண்டாம்… சூடா மொறு மொறுன்னு ரவா தோசை இப்படி செய்யுங்கள்!

மசாலா தோசையின் மசாலாவை செய்ய முதலில் அரை கிலோ அளவு உருளைக்கிழங்கை குக்கரில் வேகவைத்து தோல் உரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை துண்டுகளாக வெட்டி வைக்கவும். இரண்டு பெரிய வெங்காயம், 6 பச்சை மிளகாய், ஒரு சிறிய துண்டு இஞ்சி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது ஒரு கடாயில் நான்கு ஸ்பூன் எண்ணெய் காய வைத்து, எண்ணெய் காய்ந்ததும் ஒரு துண்டு பட்டை, இரண்டு கிராம்பு, ஒரு பிரிஞ்சி இலை, சிறிதளவு சோம்பு, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, இரண்டு கொத்து கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை போட்டு நன்கு வதக்க வேண்டும். இவை வதங்கியதும் கால் ஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

பின் வேக வைத்து துண்டுகளாக வெட்டி இருக்கும் உருளைக்கிழங்கையும் இதனுடன் சேர்த்து கிளற வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்து இதனை கிளறி கரண்டி கொண்டு அந்த உருளைக்கிழங்குகளை நன்கு மசித்து கொள்ள வேண்டும். இதில் அதிகமாக தண்ணீர் ஊற்றாமல் லேசாக தண்ணீர் தெளித்து கிளறி அடுப்பில் இருந்து இறக்கி விடலாம். இப்பொழுது இதனை ஆறவிடலாம் விருப்பப்பட்டால் சிறிதளவு எலுமிச்சைச்சாறு இதில் ஊற்றிக் கொள்ளலாம். இந்த மசாலா அதிக தண்ணீராகவும் இல்லாமல் மிகவும் கெட்டியாகவும் இல்லாமல் தோசையில் வைத்து பரப்பக்கூடிய பதத்தில் இருக்க வேண்டும். இப்பொழுது அடுப்பில் தோசை கல்லை காய வைத்து தோசை மாவை மெல்லியதாக ஊற்ற வேண்டும். தோசையை சுற்றி எண்ணெயை ஊற்றி வேக விடவும்.

சூடான சுவையான அடை!! காலை நேர டிபனுக்கு அடை இப்படி செய்யுங்கள்!

தோசை வெந்ததும் தோசையின் ஒரு பாதியில் தயாரித்து வைத்திருக்கும் மசாலாவை பரப்பி இன்னொரு பாதியை அதன் மேல் மடக்கி மூடிவிட்டு சிறிது எண்ணெய் விட்டு இருபுறமும் திருப்பி எடுக்க வேண்டும். இதனை சூடாக சட்டினி அல்லது சாம்பாருடன் பரிமாறலாம்.

அவ்வளவுதான் சுவையான மணமணக்கும் மசால் தோசை தயார்!!!

Exit mobile version