அக்காரவடிசல் அரிசி பருப்பு வைத்து செய்யப்படும் ஒரு இனிப்பு வகையாகும். தண்ணீர் ஏதும் பயன்படுத்தாமல் முழுக்க முழுக்க பாலிலேயே அரிசியையும் பருப்பையும் வேகவைத்து செய்யும் இந்த அக்காரவடிசல் பெருமாள் மற்றும் ஆண்டாள் கோவிலில் பிரசாதமாக வழங்க கூடிய ஒன்று. இதன் சுவை அத்தனை அட்டகாசமாக இருக்கும். நெய் ஒழுகும் இந்த அக்காரவடிசலை குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடுவார்கள் இதை ஒரு முறை ருசித்தவர்கள் மீண்டும் ருசிக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அந்த அளவிற்கு சுவை நிறைந்ததாக இருக்கும். இனி இந்த அக்கார அடிசலை நீங்கள் வீட்டிலேயே செய்து ருசித்து மகிழலாம். எளிமையாக அக்காரவடிசல் எப்படி வீட்டில் செய்யலாம் என்பதை நாம் பார்க்கலாம்.
கடாயில் ஒரு மேஜை கரண்டி அளவிற்கு பாசிப்பருப்பை எடுத்து அதை குறைவான தீயில் வைத்து வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு டம்ளர் அரிசியுடன் வறுத்த பாசிப்பருப்பு சேர்த்து நன்கு அலசி கொள்ளவும். இப்பொழுது குக்கரில் கழுவி வைத்துள்ள அரிசி மற்றும் பருப்பை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் 5 டம்ளர் அளவு காய்ச்சி ஆற வைத்த பால் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
புத்தாண்டுக்கு வித்தியாசமாக செய்து பாருங்கள் வாயில் வைத்ததும் கரையும் கேரட் டிலைட்..!
குக்கரை மூடி அதிகமான தீயில் வைத்து 5 விசில் வரும் வரை வேக விடவும். அரிசியும் பருப்பும் நன்கு வெந்து குழைந்து இருக்க வேண்டும். விசில் வந்து அடங்கியதும் வெந்துள்ள அரிசி மற்றும் பருப்பை ஒரு கரண்டி கொண்டு நன்றாக மசித்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அடி கனமான பாத்திரத்தில் 3 கப் அளவிற்கு வெல்லம் சேர்த்து அதனுடன் கால் கப் தண்ணீர் சேர்த்து வெல்லத்தை நன்கு கரைய விட வேண்டும் இதில் சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்து கொள்ளவும். நிறத்திற்காக சிறிதளவு குங்குமப்பூ சேர்த்து கொள்ளலாம்.
இப்பொழுது நாம் வேகவைத்து வைத்திருக்கும் அரிசியை சேர்த்து அதிகமான தீயில் வைத்து 10 நிமிடங்கள் கொதிக்க விடவும். அடிக்கடி கிளறி விடவும் அப்பொழுதுதான் அடி பிடிக்காது. பிறகு ஒரு பேனில் 1 கப் நெய் சேர்த்து அதில் விருப்பமான அளவில் முந்திரி திராட்சை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும். இதனை அக்காரவடிசலில் சேர்த்து சிறிது நேரம் கிளறி இறக்கவும். அவ்வளவுதான் அட்டகாசமான அக்காரவடிசல் தயார்.