பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் மிக விமர்சையாக கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும் இது தமிழர் திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது. விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து கொண்டாடப்படும் இந்த பொங்கல் பண்டிகை அன்று சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல் என மக்கள் பொங்கல் வைத்து சூரிய கடவுளுக்கு படைத்து வழிபாடு நடத்துவார்கள். இந்த சர்க்கரை பொங்கலை பாரம்பரிய முறைப்படி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
சர்க்கரைப் பொங்கல் பொங்கல் திருநாள் அன்று மண் பானை அல்லது வெண்கல பானையில் வைத்து செய்வது நல்லது. சிலர் செப்பு பானையை பயன் படுத்தி வைப்பார்கள். பானையை நன்கு அலங்காரம் செய்து திருநீறு மஞ்சள் குங்குமம் வைத்து சுற்றிலும் மஞ்சள் கொத்தை கட்டி வைக்க வேண்டும். இந்த சர்க்கரை பொங்கலுக்கு இரண்டு கப் அளவு பச்சரிசி, ஒரு கப் பாசிப்பருப்பு, அரை கப் அளவு கடலைப்பருப்பை எடுத்து நன்கு தண்ணீரில் அலசிக் கொள்ள வேண்டும். முதல் முறை அலசிய தண்ணீரை கீழே ஊற்றி விடலாம். அடுத்த இரண்டு முறை அலசும் தண்ணீரை சேமித்து வைக்க வேண்டும். இந்த தண்ணீரை பயன்படுத்தி செய்யும் பொழுது தான் பொங்கல் நன்கு பொங்கி வரும்.
இப்பொழுது இது நல்ல தண்ணீரை ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் பானையை வைத்து இப்பொழுது பானையில் இரண்டு கப் அளவு பால் சேர்த்து கொள்ளவும். காய்ச்சி ஆற வைத்த பாலை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் நாம் ஏற்கனவே சேமித்து வைத்திருக்கும் தண்ணீரை 10 கப் அளவு சேர்க்கவும். சேமித்து வைத்த தண்ணீர் 10 கப் அளவு இல்லை என்றால் அதற்கு சாதாரண தண்ணீரை பயன்படுத்திக் கொள்ளலாம். தண்ணீரும் பாலும் நன்கு கொதித்து பொங்கி வர வேண்டும். பொங்கி வழிந்து வந்த பிறகு அடுப்பை மிதமான தீயில் வைத்து அரிசி மற்றும் பருப்பை சேர்க்க வேண்டும்.
குறைவான தீயில் வைத்து அரிசி மற்றும் பருப்பு நன்கு வெந்து குழைந்து வரும் வரை வேக விட வேண்டும் இதனை அவ்வபோது அடிப்பிடித்து விடாமல் இருப்பதற்காக கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். அரிசி மற்றும் பருப்பு முழுமையாக வெந்து குழைந்ததும் கரண்டியை வைத்து சற்று மசித்து விட வேண்டும். சர்க்கரை பொங்கல் குழைவாக இருந்தால் நன்றாக இருக்கும். அரிசி பருப்பு நன்கு வெந்த பிறகு இதில் இரண்டரை கப் அளவிற்கு வெல்லத்தை சேர்க்க வேண்டும்.
வெல்லத்தை இடித்து கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு கிளறி கொள்ள வேண்டும். இப்பொழுது பொங்கல் தயாராகி இருக்கும். இந்த நிலையில் ஒரு தாளிக்கும் கரண்டியில் இரண்டு மேசை கரண்டி அளவிற்கு நெய் சேர்க்கலாம். நெய் சூடானதும் இதில் தேவையான அளவு முந்திரி மற்றும் திராட்சை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். வறுத்த பிறகு முந்திரி மற்றும் திராட்சையை பொங்கலுடன் சேர்த்து கிளறி இறக்கி விடலாம். அவ்வளவுதான் பாரம்பரிய முறைப்படி சர்க்கரை பொங்கல் தயாராகி விட்டது.