கோவில் சுவையில் அட்டகாசமான கார பொங்கல் இப்படி செய்து பாருங்கள்…!

கோவில்களில் வழங்கப்படும் பிரசாதங்களில் பலருக்கும் பிடித்த ஒன்று வெண் பொங்கல் அதாவது கார பொங்கல். பெரும்பாலான வீடுகளில் காலை உணவாக இந்த பொங்கல் அடிக்கடி இடம் பெறும். தேங்காய் சட்னி அல்லது சாம்பாரோடு சாப்பிட இந்த பொங்கல் அத்தனை சுவையாக இருக்கும். ஆனால் கோவில்களில் கிடைக்கும் பொங்கல் சுவை வீடுகளில் செய்வதை விட கூடுதலாக இருக்கும்.

காலைப் பொழுதை ஆரோக்கியமாக தொடங்குங்கள் சத்தான வரகரிசி வெண்பொங்கலுடன்…!

மற்ற டிபன்களை விட பொங்கல் ரெசிபி மிக மிக சுலபமானது. இந்தப் பொங்கலை கோவில்களிலும் உணவகங்களிலும் கிடைக்கும் சுவையிலேயே நம் வீட்டிலேயே எளிமையாக செய்யலாம். வாருங்கள் கோவில்களை கிடைக்கும் வெண்பொங்கலை வீட்டில் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

இந்த வெண் பொங்கல் செய்வதற்கு ஒரு கப் அளவு பச்சரிசியை எடுத்துக் கொள்ளவும். இதனுடன் ஒரு கப் அளவு பாசிப்பருப்பை எடுத்துக் கொள்ளவும். இரண்டையும் தண்ணீர் விட்டு இரண்டு முறை நன்றாக அலசிக்கொள்ள வேண்டும். பிறகு ஒரு குக்கரில் அலசிய அரிசி மற்றும் பருப்பை சேர்த்துக் கொள்ளவும்.

அரிசி மற்றும் பருப்பு இரண்டும் சேர்த்து இரண்டு கப் அளவு வந்துள்ளது. இதற்கு ஆறு கப் அளவு தண்ணீர் விட்டு இதனை அப்படியே ஊற வைக்க வேண்டும். ஒரு பத்தில் இருந்து 20 நிமிடம் வரை இந்த அரிசி மற்றும் பருப்பு நான்கு ஊற வேண்டும். அரிசி மற்றும் பருப்பு நன்றாக ஊறி வந்ததும் இதில் தேவையான பொருட்களை சேர்க்கலாம்.

20 நிமிடங்களுக்குப் பிறகு அரிசி மற்றும் பருப்புடன் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் மிளகு, ஒரு டீஸ்பூன் சீரகம் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் பொங்கலுக்கு தேவையான அளவு உப்பை சேர்த்து குக்கரை மூடி விடவும் அதிகமான தீயில் மூன்று வசூல் வரும் வரை வைக்க வேண்டும்.

குக்கர் மூன்று விசில் வந்த பிறகு அடுப்பை அணைத்து விடலாம். விசில் வந்து அடங்கிய பிறகு குக்கரை திறந்து பார்த்தால் அரிசி மற்றும் பருப்பு நன்கு வெந்து வந்திருக்கும். குழைந்து வந்திருக்கும் இந்த அரிசி மற்றும் பருப்பை ஒரு கரண்டி கொண்டு லேசாக மசித்து விடவும். மசித்த பிறகு இதற்கான தாளிப்பை நாம் சேர்த்துக் கொள்ளலாம்.

ஒரு கடாயில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு நெய் சேர்த்துக் கொள்ளவும். இதனுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் சேர்க்கவும். பிறகு ஒரு டீஸ்பூன் கடுகு, ஒரு டீஸ்பூன் சீரகம் ஆகியவற்றை சேர்க்கவும். கடுகு மற்றும் சீரகம் நன்கு பொரிந்து வந்ததும் கால் டீஸ்பூன் அளவு கடலைப்பருப்பை இதில் சேர்க்கவும்.

பிறகு இரண்டு காய்ந்த மிளகாய் மற்றும் நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய்களை சேர்த்துக் கொள்ளவும். ஒரு கொத்து அளவு கறிவேப்பிலை சேர்க்கவும். ஒரு இன்ச் இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கி அதையும் சேர்த்துக் கொள்ளவும். விருப்பமான அளவு முந்திரிப் பருப்பை சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளவும். இறுதியில் பெருங்காயத்தூள் தூவி விடவும்.

இந்த தாளிப்பை சூடாக பொங்கலுடன் சேர்த்து கிளறி விட வேண்டும். சிறிது நேரம் மூடி வைக்கவும். அவ்வளவுதான் அட்டகாசமான பொங்கல் தயாராகி விட்டது. இதனை சுடச்சுட சட்னி, சாம்பார், கத்திரிக்காய் கொத்சு வைத்து பரிமாறுங்கள் அத்தனை சுவையாக இருக்கும்.

Exit mobile version