சுலபமாக செய்யலாம் கேரளா ஸ்டைலில் அருமையான சிக்கன் தோரன்!

கேரளாவில் சிக்கன் வைத்து செய்யும் தோரன் மிகவும் பிரசித்தி பெற்ற ரெசிபி ஆகும். இந்த சிக்கன் தோரன் நாட்டுக்கோழி, பிராய்லர் கோழி என அனைத்து வகையான கோழியிலும் செய்யலாம். தேங்காய் எண்ணெயில் சிக்கனுடன் கொஞ்சம் தேங்காய் துருவல் மற்றும் மசாலாக்கள் சேர்த்து செய்யும் இந்த சிக்கன் தோரன் அட்டகாசமான ரெசிபி. வாருங்கள் இந்த சுவை நிறைந்த சிக்கன் தோரன் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

இந்த தோரன் செய்வதற்கு ஒன்றே கால் கப் அளவிற்கு தேங்காய் துருவலை எடுத்துக் கொள்ளவும். இதனுடன் ஒரு ஸ்பூன் அளவு மிளகாய் தூள், 1/4 ஸ்பூன் கரம் மசாலாத்தூள், இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். அரை கிலோ அளவு சிக்கனை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.

இப்பொழுது கடாயில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் காய்ந்ததும் ஒரு ஸ்பூன் கடுகு, 4 காய்ந்த மிளகாய் சேர்த்துக் கொள்ள வேண்டும். கடுகு நன்கு பொரிந்ததும் சிறிதளவு தேங்காய் சில்லை சிறியதாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனை எண்ணெயில் நன்றாக வதக்கி விடவும். 100 கிராம் அளவு சின்ன வெங்காயத்தை தோல் உரித்து அதனை இடித்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது கறிவேப்பிலை சிறிதளவு சேர்த்து கொள்ளவும். ஒரு டேபிள் ஸ்பூன் அளவு இடித்த பூண்டு மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு இடித்த இஞ்சி சேர்த்து அனைத்தையும் நன்றாக வதக்கி விட வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கி இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனதும் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள், இரண்டு ஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு ஸ்பூன் மல்லித்தூள் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

மசாலாக்கள் பச்சை வாசனை போக நன்கு வதங்கியதும் சுத்தம் செய்து வைத்திருக்கும் அரை கிலோ சிக்கனை சேர்த்து அதையும் நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். இரண்டு பச்சை மிளகாய்களை சேர்த்து கொள்ளவும். இந்த நிலையில் நடுத்தரமான இரண்டு வெங்காயங்களை மெல்லியதாக நறுக்கி சேர்த்து சிக்கனுடன் வதக்கி விடவும்.

சிக்கன் நன்கு வெந்து வரும் வரை கிளறி விட வேண்டும் சிக்கன் ஓரளவு வெந்ததும் தயார் செய்து வைத்திருக்கும் தேங்காய் துருவல் சேர்த்து குறைவான தீயில் வைத்து ஐந்து நிமிடங்கள் மூடி போட்டு வைக்க வேண்டும். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள், அரை ஸ்பூன் சோம்புத்தூள் சேர்த்து குறைவான தீயில் வைத்து சிறிது நேரம் கிளறி இறக்கி விடலாம். அவ்வளவுதான் அட்டகாசமான சிக்கன் தோரன் தயார்.

Exit mobile version