பள்ளி விட்டு பசியோடு வரும் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று தோன்றும். அதுபோன்ற நேரத்தில் குழந்தைகளுக்கு பிஸ்கட் கேக் என கடைகளில் வாங்கி கொடுப்பதை விட நம் வீட்டிலேயே ஆரோக்கியமாக ஏதாவது செய்து கொடுத்தால் மிகவும் நல்லது.
பசிக்கின்ற குழந்தைகளுக்கு பசியை ஆற்றும் உணவாக மட்டும் இல்லாமல் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவாகவும் இருக்க வேண்டும். அதற்கு ஒரு அற்புதமான தேர்வு தான் ராகி லட்டு. இந்த ராகி லட்டு சுவையும் நிறைந்து இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். வாருங்கள் இந்த ராகி லட்டு எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
குழந்தைகளின் உடல் வளர்ச்சியை அதிகரிக்கும் சூப்பரான 2 ரெசிபிகள்!
ராகி லட்டு செய்ய ஒரு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். நெய் உருகியதும் ஒரு கப் அளவு ராகி மாவை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனை நன்றாக வறுத்துக் கொள்ளவும். ஐந்து நிமிடங்கள் வரை நன்கு வறுத்த பிறகு இதனை தனியாக வைத்து விடலாம்.
பிறகு அதே கடாயில் கால் கப் அளவு வேர்கடலை, விருப்பமான அளவு முந்திரிப் பருப்பு மற்றும் பாதாம் சேர்க்கவும். இதனை நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். மூன்று நிமிடங்கள் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும். ஆறிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும்.
பிறகு இதனுடன் அரை கப் அளவு சர்க்கரை, 2 ஏலக்காய் மற்றும் விருப்பமான அளவு உலர் திராட்சை ஆகியவற்றை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் எதுவும் சேர்க்காமல் இதனை கொரகொரப்பாக அரைக்க வேண்டும்.
சட்டுனு செய்யலாம் சத்துக்கள் நிறைந்த ராகி சூப்!
அரைத்த பொடியை ஒரு பவுலில் சேர்த்து இதனுடன் நாம் ஏற்கனவே வறுத்து வைத்திருக்கும் ராகி மாவையும் சேர்க்கவும். இதனுடன் வறுத்த வெள்ளை எள்ளு சிறிது சேர்த்துக் கொள்ளலாம். அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு உருக்கிய நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து இதனை பிசைந்து கொள்ள வேண்டும் பிடிக்கும் பதம் வந்ததும் உருண்டைகளாக பிடித்து லட்டு செய்து கொள்ளலாம். அவ்வளவுதானா சுவை நிறைந்த சத்துக்கள் அடங்கிய சூப்பரான ராகி லட்டு தயார்.