பாட்டி கை பக்குவத்தில் சத்தான நெல்லிக்காய் துவையல்…!

உடலில் உள்ள அனைத்து பாகங்களுக்கும் நன்மை தரக்கூடிய ஒரு உணவு பொருள் என்றால் அது நெல்லிக்காய் ஆகும். சருமத்தை பளபளப்பாக வைக்க, அடர்த்தியான கூந்தலை பெற, ரத்தத்தை சுத்திகரிப்பு செய்ய, ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இப்படி அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண தினமும் ஒரு நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தாலே போதும். இந்த நெல்லிக்காயில் உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக இந்த நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிக அளவு உள்ளது.

இந்த நெல்லிக்கனி உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. நெல்லிக்காயின் துவர்ப்பு தன்மை காரணமாக ஒரு சிலருக்கு இந்த நெல்லிக்காய் சுவை பிடிக்காது. அப்படி நெல்லிக்காயின் சுவை பிடிக்காதவர்கள் இதுபோல துவையல் அரைத்து சாப்பிடலாம். நிச்சயம் இந்த துவையலின் சுவை அனைவருக்கும் பிடிக்கும். வாருங்கள் நெல்லிக்காய் துவையல் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

நெல்லிக்காய் துவையல் செய்வதற்கு முழு நெல்லிக்காய்கள் மூன்று எடுத்துக் கொள்ளவும். அந்த நெல்லிக்காயில் உள்ள விதையை நீக்கி துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். நடுத்தர அளவில் இருந்தால் மூன்று நெல்லிக்காய்கள் எடுத்துக் கொள்ளலாம். நல்ல பெரிய நெல்லிக்கனியாக இருந்தால் இரண்டு போதுமானது.

இப்பொழுது ஒரு கடாயில் இரண்டு மேசை கரண்டி அளவு எண்ணெய் சேர்க்கவும். என்னை சூடானதும் இதில் நான்கு டீஸ்பூன் அளவு உளுத்தம் பருப்பை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து உளுந்து பொன்னிறமானதும் இதனுடன் அரை டீஸ்பூன் மிளகு மற்றும் அரை டீஸ்பூன் சீரகம் சேர்த்து அதையும் நன்றாக வறுக்கவும்.

பிறகு காரத்திற்கு ஏற்ப மிளகாய்களை சேர்க்கலாம். நான்கிலிருந்து ஆறு காய்ந்த மிளகாய் இதில் சேர்த்துக் கொள்ளலாம். மிளகாய் சேர்த்து நன்றாக வறுத்த பிறகு இதனுடன் பொடியாக நறுக்கிய ஒரு சிறிய இஞ்சி துண்டையும் சேர்த்துக் கொள்ளவும். பிறகு நாம் ஏற்கனவே விதை நீக்கி நறுக்கி வைத்திருக்கும் நெல்லிக்காயை சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும்.

நெல்லிக்காய் எண்ணெயில் நன்றாக வதங்கியதும் இதில் கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து கொள்ளலாம். ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி அதையும் சேர்த்து வதக்கி விட வேண்டும். மூன்று பச்சை மிளகாயை நறுக்கி சேர்த்து, இறுதியாக கால் கப் அளவு தேங்காய் துருவலையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.

சுலபமா செய்யலாம் சுவையான திருநெல்வேலி ஸ்பெஷல் சொதி குழம்பு…!

அனைத்தும் நன்கு வதங்கியதும் இதனை வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி ஆறவிட வேண்டும். வதக்கிய பொருட்கள் அனைத்தும் நன்கு ஆறிய பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து இதனை ஒரு மிக்ஸி ஜாரில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த துவையலுக்கு தண்ணீர் அதிகம் விடாமல் லேசாக சேர்த்து அரைத்தால் போதுமானது. விருப்பப்பட்டால் ஒரு சிறிய தாளிப்பை சேர்த்துக் கொள்ளலாம். அவ்வளவுதான் அட்டகாசமான நெல்லிக்காய் துவையல் தயார்.

Exit mobile version