கொங்கு நாட்டு ஸ்டைலில் சத்துக்கள் நிறைந்த பச்சைப் பயறு கடைசல்…!

பச்சைப் பயறு உடலுக்கு தேவையான அத்தியாவசியமான சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருளாகும். உடல் வலிமையை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அன்றாடம் பச்சைப் பயிரை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. பச்சை பயிரை முளைகட்டி சாலட்டாகவோ இல்லை வேக வைத்தோ சாப்பிடலாம். ஆனால் சில குழந்தைகளுக்கு இப்படி சாப்பிடுவது பிடிக்காது. அதனால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடும் வகையில் கொங்கு நாட்டு ஸ்டைலில் எப்படி பச்சை பயறு கடைசல் செய்யலாம் என்பதை பார்க்க போகிறோம். இந்த பச்சை பயறு கடைசல் சாதம் இட்லி, தோசை என அனைத்திற்கும் அட்டகாசமாக இருக்கும் வாருங்கள் இந்த பச்சை பயறு கடைகளை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

பச்சைப்பயிறு கடைசல் செய்வதற்கு முதலில் ஒரு கப் அளவு பச்சை பயிரை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் எதுவும் சேர்க்காமல் இந்த பச்சை பயிரை சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். பச்சைப்பயிறு வாசனை வர வருத்த பிறகு இதனை ஒரு குக்கரில் சேர்க்கவும். பச்சை பயிரை இரண்டு, மூன்று முறை நன்கு அலசி கொள்ள வேண்டும். பிறகு இதனுடன் ஒரு கைப்பிடி அளவிற்கு தோல் உரித்த பூண்டு பற்கள், நான்கு பச்சை மிளகாய், அரை டீஸ்பூன் அளவிற்கு மஞ்சள் தூள், அரை டீஸ்பூன் பெருங்காயத்தூள், ஒரு டீஸ்பூன் அளவிற்கு விளக்கெண்ணெய் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு கப் பச்சை பயிருக்கு 3 கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வைக்கவும். குக்கர் ஆறு விசில் வரும் வரை இதனை வைக்க வேண்டும்.

குக்கர் விசில் வந்து அடங்கியதும் வேகவைத்த பருப்பை இப்பொழுது ஒரு மத்து வைத்து நன்றாக கடைந்து கொள்ள வேண்டும். இந்த நிலையில் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம். பயறை நன்றாக கடைந்த பிறகு இதற்கான தாளிப்பை சேர்க்கலாம். தாளிப்பை சேர்ப்பதற்கு ஒரு கடாயில் இரண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் ஒரு டீஸ்பூன் கடுகு, ஒரு டீஸ்பூன் சீரகம், மூன்று காய்ந்த மிளகாய், அரை டீஸ்பூன் பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்‌. இதனுடன் ஒரு டீஸ்பூன் அளவிற்கு இடித்த மல்லி விதைகளை சேர்க்க வேண்டும். இப்பொழுது 100 கிராம் அளவு சின்ன வெங்காயத்தை தோல் உரித்து சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும்.

தாளித்த பிறகு இதனை நாம் ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கும் பருப்போடு சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த நிலையில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். உப்பை சரிபார்த்து உப்பு தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம். சிறிதளவு கறிவேப்பிலை தூவி அடுப்பை அதிகமான தீயில் வைத்து ஒரு கொதி வரும் வரை வைக்கவும். ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விடலாம். அவ்வளவுதான் கொங்கு நாட்டு ஸ்டைலில் அட்டகாசமான பச்சைப்பயிறு கடைசல் தயார் இதில் உங்களுக்கு மிளகாய்த்தூள் விருப்பப்பட்டால் தாளிக்கும் பொழுது சேர்த்துக் கொள்ளலாம்.

Exit mobile version