அனைத்து வகையான டிபன் மற்றும் சாதத்திற்கு ஏற்ற காரசாரமான இஞ்சி துவையல்…

இஞ்சி துவையல் தென்னிந்தியாவில் பிரபலமான துவையல் வகையாகும். காரசாரமான இந்த துவையலை சூடான சாதத்தில் சேர்த்து நெய் விட்டு சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும். இதனை இட்லி, தோசை, சப்பாத்தி என அனைத்திற்கும் வைத்து சாப்பிடலாம். மற்ற துவையல், சட்னி போல் இல்லாமல் இந்த இஞ்சி துவையல் வேறுபட்ட சுவையோடு இருக்கும். வாருங்கள் இந்த இஞ்சி துவையலை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

கொழுப்பை கரைக்கும் கொள்ளு வைத்து அருமையான கொள்ளு துவையல்!

இஞ்சி துவையல் செய்ய முதலில் 50 கிராம் அளவு இஞ்சியை தண்ணீரில் கழுவி அதன் தோலை சீவி தொண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்து அதில் ஒன்றரை டேபிள் ஸ்பூன் அளவு கடலைப்பருப்பை வறுத்துக் கொள்ளவும். இதனுடன் ஒன்றரை டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பையும் நன்கு வறுக்க வேண்டும். இவற்றை வறுக்கும் பொழுதே நாம் ஏற்கனவே நறுக்கி வைத்திருக்கும் இஞ்சியையும் சேர்த்து வறுக்கவும். பிறகு ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு புளி மற்றும் நான்கு வர மிளகாய் ஆகியவற்றை சேர்த்து அனைத்தையும் நன்கு வதக்கிக் கொள்ளவும்.

இவை அனைத்தும் நன்கு வதங்கிய பிறகு இதனை வேறு பாத்திரத்திற்கு மாற்றி ஆற விடவும். இவை ஆறிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து இவற்றோடு தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு வெல்லம் ஆகியவற்றை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதிக தண்ணீர் விடாமல் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து துவையல் போல அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

ரசம் சாதத்திற்கு சுவையான பருப்பு துவையல்… இப்படி செய்து பாருங்கள்..

இப்பொழுது அதே கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் சீரகம், சிறிதளவு கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். இவற்றை தாளித்து பிறகு நாம் அரைத்து வைத்திருக்கும் துவையலை சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்கு ஒதுக்கிக் கொள்ள வேண்டும். துவையலை வதக்கிய பிறகு இதனை அடுப்பில் இருந்து இறக்கிவிடலாம் அவ்வளவுதான் சுவை நிறைந்த இஞ்சி துவையல் தயாராகி விட்டது.

Exit mobile version