எல்லோர் நாவிலும் எச்சில் ஊற செய்யும் வெள்ளை பூண்டு ஊறுகாய்… இப்படி செய்து பாருங்கள்!

ஊறுகாய் வகைகளிலே பலருக்கும் பிடித்தமான ஒரு ஊறுகாய் வெள்ளைப் பூண்டு ஊறுகாய். காரணம் பூண்டு வைத்து செய்யும் ஊறுகாய் சுவை நிறைந்ததாக இருக்கும். பூண்டின் சுவை அவற்றோடு எலுமிச்சையின் புளிப்பு தன்மை சிறிதளவு சேர்க்கப்பட்ட வெல்லத்தின் இனிப்பு சுவை என அனைத்தும் சேர்ந்து இந்த ஊறுகாயின் சுவை மிக அட்டகாசமாக இருக்கும். ஆனால் ஊறுகாய் செய்வது கடினம் என்று பெரும்பாலும் நாம் கடைகளில் விற்கப்படும் ஊறுகாய்களை வாங்கி பயன்படுத்துகிறோம். ஆனால் இந்த வெள்ளை பூண்டு ஊறுகாய் நீங்கள் வீட்டிலேயே செய்யலாம். கடைகளில் விற்கும் ஊறுகாயை விட இது சுவை நிறைந்ததாக இருக்கும். வாருங்கள் வெள்ளைப் பூண்டு ஊறுகாய் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

வெள்ளைப் பூண்டு ஊறுகாய் செய்வதற்கு நான்கு கப் வர மிளகாய், அரை கப் மல்லி, அரை கப் சீரகம் மூன்றையும் எண்ணெய் ஏதும் சேர்க்காமல் வானலியில் வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். 20 எலுமிச்சை பழங்களை பிழிந்து எலுமிச்சை சாறு எடுத்து வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். 700 கிராம் அளவு பூண்டை தோல் உரித்து வகிர்ந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது பெரிய கனமான ஒரு வானலியில் கால் லிட்டர் அளவு நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் இதில் சிறிதளவு கடுகு, சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். தாளித்த பிறகு நாம் ஏற்கனவே எடுத்து வைத்திருக்கும் எலுமிச்சை சாறை ஊற்றி கொள்ளவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து இந்த எலுமிச்சை சாறு கொதிக்க விட வேண்டும். கொதி வரும் பொழுது நாம் அரைத்து வைத்திருக்கும் பொடியை தூவ வேண்டும்.

இப்பொழுது நன்கு கொதித்ததும் நாம் வகிர்ந்து வைத்திருக்கும் பூண்டை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கிளற வேண்டும். நன்றாக கொதித்து சுருண்டு எண்ணெய் பிரிந்து வர வேண்டும். அப்படி எண்ணெய் பிரிந்து வரும் பொழுது மூன்று வெல்லத்தை தூளாக இடித்து சேர்த்துக் கொள்ள வேண்டும். வெல்லம் கரைந்து கெட்டியாகி வரும் பொழுது இறக்கி விடலாம். இந்த ஊறுகாயில் பூண்டை அதிக நேரம் வேக விடக்கூடாது. பூண்டு இந்த ஊறுகாயோடு நன்கு ஊறிய பிறகு இதை பயன்படுத்தினால் சுவையாக இருக்கும். குறைந்தது 15 நாட்கள் இந்த ஊறுகாயை அப்படியே வைத்து விட்டு பூண்டு நன்கு ஊறிய பிறகு பயன்படுத்தலாம். இப்படி செய்வதால் இது நீண்ட நாட்கள் வரை கெடாமல் இருக்கும். எண்ணெய் வடை வராது அவ்வளவுதான் சுவையான பூண்டு ஊறுகாய் தயார்.

Exit mobile version