ஆம்லெட் முட்டையை வைத்து செய்யும் சுவையான ரெசிபி. ரசம் சாதம், தயிர் சாதம், கலவை சாதம் என அனைத்து வகையான சாதத்திற்கும் அட்டகாசமாக இருக்கும். இந்த ஆம்லெட்டை முட்டையே இல்லாமல் செய்ய முடியும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? முட்டையே இல்லாமல் சுவையாக சைவ ஆம்லெட் நம்மால் செய்ய முடியும். புரட்டாசி மாதத்தில் அசைவ உணவுகளை சாப்பிடாதவர்கள் ஆம்லெட் சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் இந்த சைவ ஆம்லெட்டை முயற்சி செய்து பார்க்கலாம். மேலும் இது வெள்ளை கொண்டை கடலை சேர்த்து செய்வதால் உடலுக்கும் தேவையான சத்துக்களை தருகிறது. வாருங்கள் இந்த சைவ ஆம்லெட் எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.
மீனே இல்லாத மீன் வறுவல்… வாழைக்காய் வைத்து அருமையான சைவ மீன் வறுவல்!
சைவ ஆம்லெட் செய்வதற்கு முதல் நாள் இரவே நன்கு கழுவி சுத்தம் செய்த 100 கிராம் அளவு வெள்ளை கொண்டைக்கடலையை ஊற வைத்து விட வேண்டும். ஊறவைத்த கொண்டைக்கடலையை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மைய அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த இந்த கொண்டைக்கடலையை ஒரு பவுலில் சேர்க்கவும்.
இப்பொழுது இந்த அரைத்த கொண்டைக்கடலையுடன் பொடியாக நறுக்கிய இரண்டு வெங்காயம், 2 பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சிறிதளவு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை சிறிதளவு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும். நன்கு பழுத்த நடுத்தர அளவு தக்காளிகள் இரண்டை பொடியாக நறுக்கி அதையும் இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது அரை ஸ்பூன் மிளகாய்த்தூள், சிறிதளவு மஞ்சள் தூள், அரை டீஸ்பூன் சமையல் சோடா, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
சிறிதளவு தண்ணீர் ஊற்றி இதனை நன்கு கரைத்துக் கொள்ளவும் அதிக கெட்டியாக இருந்தால் அடை போல ஆகிவிடும் எனவே வழக்கமாக முட்டை ஆம்லெட் செய்யும் பதத்திற்கு இதனை நன்கு கரைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது தோசை கல்லை காய வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி ஒரு கரண்டி நிறைய இந்த மாவை எடுத்து தோசை கல்லில் ஊற்றி மெதுவாக தேய்த்து சுற்றிலும் எண்ணெய் உற்றவும். தேவையான அளவு மிளகுத்தூள் தூவி இருபுறமும் திருப்பி நன்கு சிவக்க வேகவிட்டு எடுக்கவும். திருப்பும் பொழுது கவனமாய் திருப்பவும் ஒரு புறம் நன்கு வந்ததும் உடையாமல் திருப்ப வேண்டும்.
ஐந்தே நிமிடத்தில் செய்ய அசத்தலான ரெசிபி…! பிரட் ஆம்லெட்!
அவ்வளவுதான் சைவ ஆம்லெட் தயார்! இது உணவுகளுக்கு சைட் டிஷ் ஆகவும் மாலை நேர சிற்றுண்டி ஆகவும் சாப்பிட அருமையாக இருக்கும்!