தீபாவளிக்கு வீட்டிலேயே சுலபமாக செய்யலாம் பேக்கரி சுவையில் அட்டகாசமான மினி ஜாங்கிரி..

தீபாவளி பண்டிகை நெருங்கி விட்டது. பலரும் தீபாவளி பண்டிகைக்காக இனிப்பு வகைகள் பலகாரங்கள் செய்யத் தொடங்கி இருப்பார்கள். நாடு முழுவதும் கொண்டாடப்படக்கூடிய ஒரு முக்கிய பண்டிகையான தீபாவளி அன்று பலவகையான இனிப்பு வகைகளை செய்து மகிழ்வது வழக்கம். இந்த தீபாவளிக்கு பேக்கரிகளில் கிடைக்கும் அதே சுவையில் அட்டகாசமான மினி ஜாங்கிரியை செய்து மகிழுங்கள். ஜாங்கிரியை எப்படி சுலபமாக பேக்கரி சுவையிலேயே செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

மினி ஜாங்கிரி செய்வதற்கு முதலில் இரண்டு கப் அளவு உளுந்தம் பருப்பை ஊறவைத்து கொள்ள வேண்டும். இதனுடன் இரண்டு மேசை கரண்டி அளவிற்கு பச்சரிசியையும் ஊற வைக்கவும். இந்த உளுந்து மற்றும் பச்சரிசி குறைந்தது 2 மணி நேரம் நன்கு ஊற வேண்டும். உளுந்து 2 மணி நேரம் ஊறிய பிறகு இதனை புதிய தண்ணீர் ஊற்றி மீண்டும் இரண்டு முறை அலச வேண்டும். இவ்வாறு செய்வதினால் உளுந்தின் வாசனை ஜாங்கிரியில் வராமல் தடுக்கலாம். இப்பொழுது இந்த உளுந்து மற்றும் பச்சரிசியை கிரைண்டர் அல்லது மிக்ஸியில் மைய அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த மாவுடன் கால் கப் அளவு சோள மாவு, ஒரு சிட்டிகை உப்பு, சிறிதளவு விருப்பமான நிறத்தில் புட் கலர் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இவை அனைத்தும் ஒன்று சேரும்படி நன்றாக சில நிமிடங்கள் கலந்து கொள்ளவும்.

இப்பொழுது மற்றொரு பாத்திரத்தில் இரண்டரை கப் அளவு சர்க்கரையை எடுத்துக் கொள்ளவும். இதனுடன் ஒன்றரை கப் அளவு தண்ணீர் சேர்த்து பாகாக காய்ச்சிக் கொள்ள வேண்டும். சிறு கம்பி பதம் வரும் வரை இதனை காய்ச்சவும். கம்பி பதம் வந்த பிறகு இதனுடன் சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து விட்டு இறக்கி விடலாம். இப்பொழுது நாம் ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கும் மாவை கோன் வடிவத்தில் உள்ள ஒரு பிளாஸ்டிக் பையில் சேர்த்து இறுதியில் துளை இட்டுக் கொள்ள வேண்டும். இதற்கு எண்ணெய் கவரைக் கூட பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தப் பையில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் மாவை நிரப்பி சிறிய வடிவில் ஜாங்கிரியாக பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிழிந்த ஜாங்கிரி இரு பக்கமும் நன்கு வெந்த பிறகு இதில் உள்ள எண்ணெயை வடித்து எடுத்து விடலாம். இவற்றை நாம் தயார் செய்து வைத்திருக்கும் சர்க்கரை பாகில் சேர்த்து மூன்று நிமிடங்கள் அப்படியே வைத்து விடவும். ஜாங்கிரி பாகில் நன்றாக ஊறியதும் இதனை எடுத்து விடலாம்.

அவ்வளவுதான் சுவையான மினி ஜாங்கிரி தயார்…!

Exit mobile version