இந்த கிறிஸ்துமஸ்க்கு பஞ்சு போல மென்மையான பிளம் கேக் இப்படி செய்து பாருங்கள்…!

கிறிஸ்மஸ் வந்து விட்டாலே பலருக்கும் நினைவு வருவது கேக் தான். கேக் மற்றும் டெஸட் வகைகள் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. அதிலும் குறிப்பாக பிளம் கேக் அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று. இந்தப் பிளம் கேக் சுலபமாக வீட்டிலேயே செய்ய முடியும். கடையில் தான் வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. வாருங்கள் சுலபமாக இந்த பிளம் கேக் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

பிளம் கேக் செய்வதற்கு முதலில் அதற்கான உலர் பழங்களை தயார் செய்து வைத்துக் கொள்வோம். ஒரு பௌலில் கால் கப் அளவிற்கு டியூட்டி புரூட்டி, கால் கப் கருப்பு உலர் திராட்சை மற்றும் 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு கோல்டன் உலர் திராட்சை ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும். இவற்றோடு ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு பொடியாக நறுக்கிய வால்நட், கால் கப் பொடியாக நறுக்கிய முந்திரி, கால் கப் பொடியாக நறுக்கிய பாதாம் மற்றும் பொடியாக நறுக்கிய செர்ரி கால் கப், மற்றும் மூன்று பேரிச்சை பழங்கள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ளவும். இப்பொழுது இதனை தனியாக வைத்து விடலாம்.

பிறகு அடுப்பில் ஒரு பேன் வைத்து அதில் கால் கப் அளவிற்கு சர்க்கரையை சேர்த்து கொள்ள வேண்டும். தண்ணீர் எதுவும் சேர்க்கக் கூடாது சர்க்கரை உருக ஆரம்பிக்கும். சர்க்கரை நன்கு உருகி தேன் போன்ற தன்மைக்கு வரும் அளவிற்கு அதனை கிளறி விட வேண்டும். இப்பொழுது அடுப்பை அணைத்து அரை கப் அளவிற்கு நன்கு கொதிக்கும் தண்ணீரை அதில் ஊற்ற வேண்டும். இதனை நன்கு கிளறி விடவும் சர்க்கரை கட்டிப்படாத வண்ணம் கிளறி விடவும். சர்க்கரை பாகு தண்ணீரில் முழுவதும் கலந்தவுடன் அடுப்பை மிதமான தீயில் வைத்து ஏற்கனவே நாம் கலந்து வைத்திருக்கும் உலர் பழங்களை அதில் சேர்க்க வேண்டும். குறைந்தது ஏழு நிமிடங்கள் இதனை நன்கு வேக விட வேண்டும். ஏழு நிமிடங்களுக்கு பிறகு அடுப்பை அணைத்து இந்த உலர் பழங்களை ஆற விடலாம்.

இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரில் முக்கால் கப் அளவிற்கு சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரையோடு நான்கு கிராம்பு, 4 ஏலக்காய், இரண்டு துண்டு பட்டை ஆகியவற்றை சேர்த்து நன்கு பொடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பவுலில் 100 கிராம் அளவிற்கு வெண்ணெய் சேர்த்து அதை நன்கு பீட் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். வெண்ணெய் நன்கு பீட் செய்து அதன் நிறம் மாறியதும் நாம் பொடித்து வைத்திருக்கும் சர்க்கரை பவுடரையும் சேர்த்து பீட் செய்யவும். இதனோடு இரண்டு முட்டையை சேர்த்து மீண்டும் நன்கு கலந்து விட வேண்டும். ஒரு டீஸ்பூன் அளவிற்கு வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்கு பீட் செய்யவும். இவை அனைத்தும் நன்கு பீட் செய்த பிறகு நாம் ஏற்கனவே வேக வைத்து வைத்திருக்கும் உலர் பழங்களை சேர்த்து கலந்து விட வேண்டும்.

பிறகு ஒரு கப் அளவிற்கு மைதா, ஒரு டீஸ்பூன் பேக்கிங் பவுடர், அரை டீஸ்பூன் பேக்கிங் சோடா ஆகியவற்றை சலித்து சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனை நன்றாக கட் அண்ட் போல்டர் முறையில் கலந்து விட்டுக் கொள்ளவும். இப்பொழுது ஒரு டிரேயில் பட்டர் தடவி அதில் பேப்பர் சுற்றிலும் வைத்துக் கொள்ளவும். நாம் தயார் செய்து வைத்திருக்கும் மாவை அதில் சேர்க்கவும். ஒரு அடி கனமான கடாயை பத்து நிமிடங்கள் அதிகமான தீயில் வைத்து அடுப்பில் சூடு செய்து கொள்ள வேண்டும். இதில் ஒரு ஸ்டாண்ட் வைத்து கேக் மாவு உள்ள ட்ரேயை வைக்கவும். இதனை மூடி போட்டு ஒரு மணி நேரம் வேக விடவும். ஒரு மணி நேரத்திற்கு பிறகு கேக் நன்கு வெந்து வந்திருக்கும். இப்பொழுது அதனை துண்டுகளாக வெட்டி பரிமாறலாம்.

அவ்வளவுதான் சுவையான பிளம் கேக் தயாராகி விட்டது.

Exit mobile version