கல்யாண வீட்டு சுவையில் அருமையான சௌசௌ கூட்டு…!

சௌசௌ நீர்ச்சத்து நிறைந்த ஒரு அருமையான காய்கறி வகை ஆகும். சௌசௌ புற்றுநோயை வராமல் தடுக்கும் ஆற்றல் உடையதாக இருக்கிறது. இந்த காயில் விட்டமின் ஏ, பி, சி, கே போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. உயர் ரத்த அழுத்தத்தை சரி செய்திட இந்த காய் மிகவும் உதவி புரிகிறது. கால்சியம் சத்து நிறைந்து உள்ளதால் எலும்புகள் வலுப்பெறச் செய்யும் தன்மை நிறைந்ததாக இந்த சௌசௌ இருக்கிறது. வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை நீக்கி வயிற்றை சுத்தப்படுத்திடவும் இந்த காய் உதவுகிறது. கர்ப்பிணிப் பெண்கள் சௌசௌ காயை அதிக அளவு உணவில் சேர்த்து வந்தால் கை, கால் வீக்கம் ஏற்படுவதை தவிர்க்கலாம். இத்தனை நன்மைகள் நிறைந்த சௌசௌ வைத்து எப்படி கல்யாண வீடுகளில் பரிமாறப்படும் சுவையிலேயே சௌசௌ கூட்டு செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

மார்கழி திருவாதிரை ஸ்பெஷல் ரெசிபி ஏழு காய் கூட்டு செய்வது எப்படி..!

சௌசௌ கூட்டு செய்வதற்கு முதலில் கால் கப் அளவு பாசிப்பருப்பு, கால் கப் கடலைப்பரப்பு இரண்டையும் ஒன்றாக கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை தண்ணீரில் நன்றாக அலசி ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு ஒரு குக்கரில் கால் கிலோ அளவு சௌசௌவை துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு ஊற வைத்திருக்கும் பருப்புகளை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்து இதனுடன் இரண்டு பல் பூண்டும் சேர்த்து குக்கரை மூடி விடவும். குக்கர் மூன்று விசில் வரும் வரை மிதமான தீயில் வைத்து இதனை அடுப்பில் வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரில் ஐந்து மேசை கரண்டி அளவிற்கு துருவிய தேங்காய் சேர்த்துக் கொள்ளவும். இதனுடன் மூன்று பச்சை மிளகாய், அரை டீஸ்பூன் சீரகம், கால் டீஸ்பூன் மிளகு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவு தண்ணீர் விட்டு இதனை நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பேனில் இரண்டு மேசை கரண்டி அளவிற்கு எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்க்கவும். இதனுடன் ஒரு கொத்து கறிவேப்பிலை மற்றும் ஒரு காய்ந்த மிளகாயை சேர்க்கவும். வெங்காயம் நல்ல பொன்னிறமாக வந்ததும் ஒரு தக்காளியை பொடியாக நறுக்கி சேர்த்து தக்காளி மென்மையாகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.

ஆரோக்கியம் நிறைந்த கீரை வைத்து இப்படி கீரை கூட்டு செய்து பாருங்கள்…!

தக்காளி மென்மையாக வதங்கியதும் நாம் வேகவைத்து வைத்திருக்கும் சௌசௌ காயை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது நாம் அரைத்து வைத்திருக்கும் விழுதையும் சேர்க்கலாம். அனைத்தையும் நன்றாக கிளறி விடவும். உப்பு இந்த நிலையில் தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம். இதனை மூன்று நிமிடங்கள் வரை மிதமான தீயில் வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும். கூட்டு நன்றாக கொதித்து வந்ததும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி இறக்கிவிடலாம். அவ்வளவுதான் அட்டகாசமான சுவையில் கல்யாண வீட்டு சௌசௌ கூட்டு தயாராகி விட்டது.

Exit mobile version