ஈஸியா செய்யலாம் காரசாரமான காலிஃப்ளவர் பெப்பர் ப்ரை…!

காலிஃப்ளவர் வைத்து வழக்கமாக செய்யும் சூப், மசாலா போன்று இல்லாமல் இந்த காலிஃப்ளவர் பேப்பர் ஃப்ரை வித்தியாசமான ஒரு ரெசிபி ஆகும். தயிர் சாதம், ரசம் சாதம் என அனைத்து வகையான சாதத்திற்கும் அட்டகாசமான காம்பினேஷன் இந்த காலிபிளவர் பெப்பர் ஃப்ரை. சைவ மற்றும் அசைவ உணவு பிரியர்கள் அனைவருக்கும் பிடித்த வகையில் இருக்கும். வாருங்கள் சுவையான காரசாரமான இந்த காலிபிளவர் பெப்பர் ஃப்ரை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

காலிஃப்ளவர் பெப்பர் ஃப்ரை செய்வதற்கு முதலில் ஒரு முழு காலிஃப்ளவரை அரிந்து அதில் உள்ள பூக்களை மட்டும் எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து தண்ணீர் கொதித்ததும் அதில் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நாம் நறுக்கி வைத்திருக்கும் காலிஃபிளவரை சேர்த்து ஐந்து நிமிடங்கள் வைத்து விடவும் இப்படி செய்வதால் காலிஃப்ளவரில் ஏதேனும் புழுக்களோ, பூச்சிகளோ இருந்தால் அவை அழிந்து விடும். எப்பொழுதும் காலிஃப்ளவரை தண்ணீரில் அலசி உடனே சமைத்து விடக்கூடாது. இவ்வாறு கொதிக்கும் நீரில் போட்டு அதன் பிறகு சமைக்கவும்.

இப்பொழுது ஒரு கடாயில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதில் அரை ஸ்பூன் சோம்பு சிறிதளவு கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். இவற்றை தாளித்த பிறகு பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம் வதங்கும் பொழுதே ஒரு ஸ்பூன் அளவு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதையும் பச்சை வாசனை போக வதக்கவும். வெங்காயம் வதங்கிய பிறகு பொடியாக நறுக்கிய மூன்று தக்காளி பழங்களை சேர்த்து இவை மென்மையாகும் வரை நன்கு வதக்கிக் கொள்ளவும். இப்பொழுது கால் ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், இரண்டு ஸ்பூன் மல்லித்தூள் ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி மசாலாக்கள் பச்சை வாசனை போக வதக்கிக் கொள்ளவும்.

தேவையான அளவு உப்பை இந்த நிலையில் சேர்த்துக் கொள்ளவும். மசாலாக்கள் வதங்கி எண்ணெய் பிரிந்து வரும் பொழுது நாம் ஏற்கனவே சுத்தம் செய்து வைத்திருக்கும் காலிஃப்ளவரை சேர்த்து நன்கு கிளறிக் கொள்ள வேண்டும். காலிபிளவர் நன்கு வெந்த பிறகு இதில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு தேங்காய் பால் சேர்த்துக் கொள்ளவும். பிறகு ஒரு ஸ்பூன் அளவு மிளகுத்தூள், கால் ஸ்பூன் சோம்புத்தூள் ஆகியவற்றை சேர்த்து கிளறி, இறுதியாக கை நிறைய கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை தூவி இறக்கிவிடலாம்.

அவ்வளவுதான் சுவையான காலிஃப்ளவர் பெப்பர் ஃப்ரை தயாராகிவிட்டது…!

Exit mobile version