குழந்தைகளுக்கு பிடித்தமான வாழைப்பழ பணியாரம்… இப்படி செஞ்சு கொடுங்க விரும்பி சாப்பிடுவாங்க!

வாழைப்பழ பணியாரம் ஒரு அருமையான ஸ்னாக்ஸ் வகையாகும். இந்த வாழைப்பழ பணியாரம் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அருமையான சுவையோடு இருக்கும். இதை செய்வதும் மிக சுலபம். குறைவான பொருட்களைக் கொண்டு சுவையான இந்த வாழைப்பழ பணியாரத்தை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

தீபாவளிக்கு மொறுமொறு ஸ்னாக்ஸ் சுவையான ரிப்பன் பக்கோடா…! சுலபமாக செய்வது எப்படி?

வாழைப்பழ பணியாரம் செய்வதற்கு முதலில் ஒரு கப் அளவு பச்சரிசியை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பச்சரிசியை தண்ணீரில் இரண்டு முறை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். பச்சரிசியை கழுவிய பிறகு ஒரு துணியில் இதனை பரப்பி நிழலில் காய வைக்க வேண்டும். இது குறைந்தது 15 நிமிடங்கள் காய வைக்கவும். முக்கால் கப் வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் கால் கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கரைத்துக் கொள்ள வேண்டும். இந்த வெல்லப் பாகு கம்பி பதம் வர வேண்டிய அவசியம் இல்லை.

பிறகு நாம் ஊற வைத்து காய வைத்திருக்கும் அரிசியை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும். இதனை நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். மிக்ஸியில் அரைத்த அரிசி மாவுடன் நான்கு ஏலக்காய் மற்றும் நாம் தயார் செய்து வைத்திருக்கும் வெல்லப் பாகில் சிறிதளவு சேர்த்து இவற்றோடு இரண்டு வாழைப்பழத்தை தோல் உரித்து சேர்த்து இதனை அரைத்துக் கொள்ள வேண்டும். மாவு அரைப்பட்டது மற்றொரு பாத்திரத்தில் சேர்த்து மீதம் இருக்கும் சர்க்கரை பாகையும் சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ளவும்.

மாவு அதிக தண்ணீராகவும் இல்லாமல் கெட்டியாகவும் இல்லாமல் தோசை மாவு பதத்தில் இருக்கும் படி பார்த்துக் கொள்ளவும். இப்பொழுது ஒரு சிறிய கடாயில் இரண்டு டீஸ்பூன் நெய் சேர்த்து இதில் சிறிதளவு முந்திரிப் பருப்பை பொடியாக நறுக்கி சேர்த்து அந்த நெய்யில் நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். முந்திரியை வறுத்து எடுத்த பிறகு இதனை மாவோடு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு பணியார சட்டியை அடுப்பில் வைத்து அதில் அனைத்து குழிகளிலும் சிறிதளவு நெய் அல்லது எண்ணெய் ஊற்றவும். நாம் தயார் செய்திருக்கும் மாவை ஊற்ற வேண்டும். மிதமான தீயில் வைத்து வேக விட வேண்டும். மாவு ஒரு புறம் வந்ததும் மற்றொருபுறம் திருப்பி நன்றாக வேக விடவும். இரு பக்கமும் நன்கு வெந்து சிவந்ததும் இதனை எடுத்துவிடலாம். அவ்வளவுதான் சுவையான வாழைப்பழ பணியாரம் தயாராகிவிட்டது.

Exit mobile version