அஜீரணம், வயிறு கோளாறு, வாய்வு தொல்லை, காய்ச்சல், வாய் கசப்பு போன்ற சமயங்களில் ரசம் அருமருந்தாக அமையும். அப்படி சாப்பிடும் ரசம் சுவைக்கு மட்டுமல்லாமல் புரோட்டின் சத்து நிறைந்ததாக இருக்கும் பட்சத்தில் உடலுக்கு நல்ல வலிமையை ஏற்படுத்தும். இந்த முறை அரைக்கப் பாசிப்பயிறு வைத்து ரசம் செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க.
முதலில் அரை கப் பாசிப்பயிரை நன்கு கழுவி சுத்தம் செய்து இரண்டிலிருந்து நான்கு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். அதன் பிறகு மீண்டும் சுத்தம் செய்து ஒரு குக்கரில் சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் ஒரு தக்காளி, ஒரு பச்சை மிளகாய், 3 சின்ன வெங்காயம், 3 வெள்ளை பல் பூண்டு, ஐந்து மிளகு, அரை தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் கலந்து ஐந்து விசில்கள் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
குக்கரின் அழுத்தம் குறைந்த பிறகு வேகவைத்ததில் தக்காளியை மட்டும் தனியாக எடுத்து வைத்து மீதம் இருக்கும் கலவையை நன்கு மசித்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து அரை தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக இரண்டு காய்ந்த வத்தல், ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். இப்பொழுது நாம் வேகவைத்து மசித்து வைத்திருக்கும் பாசிப்பருப்பை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் தேவையான அளவு தண்ணீர் கலந்து மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.
இந்த நேரத்தில் ஒரு மிக்ஸி ஜாரில் 10 சின்ன வெங்காயம், ஐந்து பல் வெள்ளை பூண்டு, அரை தேக்கரண்டி சீரகம், அரை தேக்கரண்டி மிளகு, அரை தேக்கரண்டி தனியா சேர்த்து பாதியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
சாதாரண சமையலை அசத்தல் சமையலாக மாற்றும் எளிமையான சமையல் டிப்ஸ்கள் இதோ…
அடுத்ததாக இதனுடன் வேகவைத்த தக்காளி, ஊற வைத்த புளி சேர்த்து மீதம் அரைத்துக் கொள்ளலாம். இப்பொழுது அரைத்த கலவையை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் தேவையான அளவு பெருங்காயத்தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு தேவையான அளவு கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான பச்சை பயிறு ரசம் தயார்.