சமீப காலத்தில் நடந்த சினிமா பிரபலங்களின் வீட்டில் பரிமாறப்பட்ட இந்த ராமசேரி இட்லி மிகவும் பிரபலமடைய துவங்கி உள்ளது. பார்ப்பதற்கு பஞ்சு போல மெத்து மெத்து என மிருதுவாக இருக்கும் இந்த இட்லி சுவைப்பதற்கும் அருமையாக உள்ளது. ஒரு முறை ஆவது இந்த இட்லியை நாம் நம் வீட்டில் செய்து மகிழ்விக்க விரும்புபவர்களுக்கு இந்த ரெசிபி மிகவும் உதவியாக இருக்கும். வாங்க பாலக்காடு ஸ்பெஷல் ராமசேரி இட்லி நம் வீட்டில் செய்வதற்கான எளிமையான விளக்கம் இதோ…
முதலில் இட்லி செய்வதற்கு மாவு தயார் செய்து கொள்ள வேண்டும்.. அதற்காக ஒரு கப் இட்லி அரிசி, ஒரு கப் பச்சரிசி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். மீண்டும் சரியான அளவு தண்ணீர் கலந்து நான்கு மணி நேரம் அப்படியே ஊற வைக்க வேண்டும்.
அடுத்ததாக அரை கப் உளுந்து அரை தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து கழுவி சுத்தம் செய்து தண்ணீர் கலந்து ஊற வைத்துக் கொள்ளலாம். உளுந்தும் குறைந்தது 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
அடுத்ததாக உளுந்து மாவு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். உளுந்து மாவு அரைக்கும் பொழுது ஐஸ் கட்டிகளை பயன்படுத்தி அரைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக அரிசி மாவு அரைத்து எடுக்க வேண்டும். இரண்டு மாவையும் ஒன்றாக கலந்து உப்பு சேர்த்து நன்கு கலந்து கொடுத்து குறைந்தது 8 முதல் 10 மணி நேரம் அப்படியே புளிக்க வைக்க வேண்டும்.
புத்தாண்டு முன்னிட்டு 90ஸ் குழந்தைகளின் மிக விருப்பமான இனிப்பு கலகல! ரெசிபி இதோ…
இப்பொழுது மாவு தயாராக மாறி உள்ளது. இந்த இட்லியின் தனித்துவம் இதை நாம் வேகவைத்து எடுக்கும் பக்குவத்தில் உள்ளது. இதற்காக ஒரு மண் பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேவையான அளவு தண்ணீர் கலந்து அதன் மேல் பக்கம் ஒரு இடியாப்ப தட்டு வைத்து மூடிவிட வேண்டும்.
அதன் மேல் ஒரு வெள்ளை துணி விரித்து அதற்கு மேல் நாம் தயார் செய்து வைத்திருக்கும் மாவை இட்லி மற்றும் தோசை பதத்திற்கு நடுவே வரும் அளவில் ஊற்றிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு மூடி போட்டு ஆறு நிமிடம் மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.
ஆறு நிமிடம் கழித்து துணியில் இருந்து இட்லியை தனியாக எடுத்து விடலாம். இப்பொழுது சுவையான பஞ்சு போல மெத்து மெத்து இட்லி தயார். இந்த இட்லிக்கு பொடி வைத்து சாப்பிடும்பொழுது சிறப்பாக இருக்கும்.