குழந்தைகளுக்குப் பிடித்தமான உணவு வகைகளில் ஒன்று பூரி. சாதாரண நாட்களில் நாம் வீட்டில் பூரி
செய்தால் கூட அதை விசேஷ நாட்களாக மாற்றி விடும். குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்கள் வரை இதை விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பூரி செய்தால் பெரும்பாலும் நம் வீடுகளில் உருளைக்கிழங்கு மசாலா செய்வது தான் வழக்கம்.. அந்த கிழங்கு மசாலாவை நாம் எப்பொழுதும் போல ஒரே மாதிரியாக செய்யாமல் சற்று வித்தியாசமாக பஞ்சாபி ஸ்டைலில் ஒரு முறை ட்ரை பண்ணலாம் வாங்க.
ஒரு குக்கரில் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி சீரகம், அரை தேக்கரண்டி கடுகு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
கடுகு மற்றும் சீரகம் நன்கு பொரிந்ததும் பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கும் நேரத்தில் கருவேப்பிலை சேர்த்துக் கொள்ளலாம்.
வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் நன்கு பழுத்த ஒரு தக்காளி பழத்தை ஆறாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம். தக்காளி சேர்க்க ஒரு நிமிடம் கழித்து ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இஞ்சி பூண்டு விழுதுவின் பச்சை வாசனை சென்றவுடன் இரண்டாக கீறிய இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். பச்சை மிளகாய் லேசாக வதங்கினால் போதுமானது.
பச்சை மிளகாய் சேர்த்த ஒரு நிமிடம் கழித்து தோள்களை நீக்கி சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்துக் கொள்ளலாம்.
உருளைக்கிழங்கை எண்ணெயுடன் சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ள வேண்டும். இதில் தற்பொழுது மசாலா வகைகளை சேர்த்துக் கொள்ளலாம். இதற்காக ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி சோம்புத்தூள், அரை தேக்கரண்டி சீரகத்தூள், அரை தேக்கரண்டி கறி மசாலா தூள், கால் தேக்கரண்டி பெருங்காயம், கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து கொள்ள வேண்டும்.
மசாலாக்களின் பச்சை வாசனை செல்லும் வரை வதக்க வேண்டும். மசாலாக்களை வதக்கும் பொழுது அரை தேக்கரண்டி சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சாதாரண சமையலை அசத்தல் சமையலாக மாற்றும் அரிய டிப்ஸ்கள் இதோ!
இறுதியாக மசாலாவிற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இதனுடன் ஒன்றை கப் அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொடுத்து குக்கரை மூடி வைத்துக் கொள்ளலாம்.
மிதமான தீயில் 3 முதல் 4 விசில்கள் வரும் வரை வேக வைத்து இறக்கிக் கொள்ளவும். இதில் வாசனைக்காக கஸ்தூரி மேத்தி அல்லது கைப்பிடி அளவு மல்லி இலைகளை பொடியாக நறுக்கி சேர்த்து பரிமாறினால் பூரிக்கு அருமையான கிழங்கு மசால் தயார்.