புரட்டாசியில் இட்லி, கறி குழம்பு சாப்பிட முடியவில்லை என வருத்தப்படுபவர்களுக்கு கறி குழம்பின் அதே சுவையில் அருமையான வெஜிடபிள் கிரேவி.. ரெசிபி இதோ!

இந்த வெஜ் கறி குழம்பு ரெசிபி செய்வதற்கு முதலில் 300 கிராம் உருளைக்கிழங்கை நன்கு வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு அகலமான கடாயில் நான்கு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம், மூன்று துண்டு பட்டை, இரண்டு கிராம்பு, இரண்டு பிரியாணி இலை, இரண்டு ஏலக்காய் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கும் நேரத்தில் இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். இதனுடன் இடித்து வைத்த இஞ்சி பூண்டு ஒரு தேக்கரண்டி சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். இஞ்சி மற்றும் பூண்டுவின் பச்சை வாசனை சென்றவுடன் நன்கு பழுத்த இரண்டு தக்காளி பழத்தை பொடியாக நறுக்கி கடாயில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தக்காளி நன்கு மசிந்து வரும் நேரத்தில் மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம். இதற்காக அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள், இரண்டு தேக்கரண்டி தனியா தூள், ஒரு தேக்கரண்டி கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

மசாலா வதங்கும் நேரத்தில் குழம்பிற்கு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். மசாலாவின் பச்சை வாசனை செல்லும் வரை அதாவது குறைந்தது இரண்டு நிமிடம் நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளை சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். இப்பொழுது இந்த மசாலாவில் ஒன்றரை டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் நன்கு கொதித்து வரும் நேரத்தில் நாம் முதலில் வேகவைத்து மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்குகளை சேர்த்துக் கொள்ளலாம்.

உருளைக்கிழங்கு நன்கு மசாலாவுடன் இணைந்து ஒரு கொதி வர வேண்டும். அந்த நேரத்தில் குருமாவிற்கு தேவையான தேங்காய் மசாலாவை தயார் செய்து கொள்ளலாம். இதற்காக ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு கைப்பிடி அளவு தேங்காய், அரை தேக்கரண்டி பெருஞ்சீரகம், கால் தேக்கரண்டி கசகசா சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.\

ஐந்து நிமிடம் போதும்… முறுமுறு ஈவினிங் ஸ்நாக்ஸ் தயார்! வாங்க ஹெல்த்தியான முட்டை பக்கோடா செய்வதற்கான ரெசிபி…

குருமா நன்கு கொதித்து வரும் நேரத்தில் நாம் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதுகளை சேர்த்து கலந்து கொள்ளவும். இப்பொழுது மிதமான தீயில் பத்து முதல் 15 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். 15 நிமிடம் கழித்து திறந்து பார்த்தால் சூப்பரான உருளைக்கிழங்கு குருமா தயார்.

பரிமாறுவதற்கு முன்பாக பொடியாக நறுக்கிய கருவேப்பிலை இலைகள் தூவி பரிமாறினால் கறி குழம்பு வாசத்தில் அருமையாக இருக்கும். புரட்டாசி மாதங்களில் ஞாயிற்றுக்கிழமை இட்லியும் கறி குழம்பும் சாப்பிட முடியவில்லை என வருத்தப்படுபவர்கள் ஒரு முறை இந்த இட்லியும் உருளைக்கிழங்கு குருமா வைத்து சாப்பிட்டால் கறி குழம்பு சாப்பிட்ட அதை திருப்தி கிடைக்கும்.

Exit mobile version