விடுமுறை நாட்களில் ஸ்பெஷல் ஆக மாற்ற வேண்டுமா? வாங்க காரசாரமான கிராமத்து ஸ்டைல் மிளகு கோழி பிரட்டல்!

கோழிக்கறி வைத்து பலவிதமான ரெசிபிகள் செய்திருந்தாலும் மிளகு சேர்த்து செய்யும் பொழுது அதன் சுவை சற்று கூடுதலாகவும் தனி சிறப்பாகவும் இருக்கும். மேலும் உணவில் அதிகப்படியாக மிளகு சேர்க்கும் பொழுது ஜீரண சக்தியை அதிகரித்து உடலில் அசதி, சளி தொல்லை போன்றவற்றிற்கு நல்ல அருமருந்தாகவும் அமைகிறது. இத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்த மிளகு சேர்த்து அருமையான காரசாரமான கோழி பிரட்டல் செய்வதற்கான ரெசிபி இதோ…

மிளகு கோழி பிரட்டல் செய்வதற்கு முதலில் மசாலாக்களை தயார் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ஒரு அகலமான கடாயில் ஒரு தேக்கரண்டி மல்லி, ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம், சீரகம் ஒரு தேக்கரண்டி, மிளகு இரண்டு தேக்கரண்டி, காய்ந்த வத்தல் மூன்று சேர்த்து நன்கு வாசனை வரும்வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

வறுத்த இந்த பொருட்கள் சூடு தணிந்ததும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கும் நேரத்தில் கைப்பிடி அளவு கருவேப்பிலை, ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்.

வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து வதக்க வேண்டும். இந்த நேரத்தில் கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கனை கடாயில் சேர்த்துக் கொள்ளலாம்.

இப்பொழுது கடாயில் ஒன்றரை டமளர் தண்ணீர் சேர்த்து சிக்கன் வெந்து வரும் அளவிற்கு மூடி போட்டு வேக வைக்க வேண்டும். குறைந்தது ஐந்து முதல் 10 நிமிடங்கள் கழித்து நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை கோழிக்கறியுடன் சேர்த்து ஒரு முறை கலந்து கொடுத்து மீண்டும் மூடி போட்டு வேக வைக்க வேண்டும்.

திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாவிற்கு போட்டி போடும் சுவையின் ஜவ்வரிசி அல்வா!

தண்ணீர் நன்கு வற்றி சிக்கன் நன்கு வெந்து சுண்டி வரும் நேரத்தில் அடுப்பை அணைத்து விடலாம். இப்பொழுது இறுதியாக உப்பு சரிபார்த்துக் கொள்ள வேண்டும். கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தலை தூவி இறக்கினால் சுவையான கோழி மிளகு பிரட்டல் தயார்.

சூடான சாதத்துடன் வைத்து சாப்பிடும் பொழுது இந்த மிளகு பிரட்டலின் சுவை அருமையாக இருக்கும். அதைவிட ரசம் சாதம், பருப்பு சாதம், தயிர் சாதத்துடன் வைத்து சாப்பிடும் பொழுது மேலும் சிறப்பாக இருக்கும்.

Exit mobile version