வெங்காயம் மட்டும் போதும்… மூன்று வேளையும் அசத்தும் தொக்கு ரெசிபி இதோ!

வீட்டில் காய்கறிகள் இல்லாத சமயங்களில் குழம்பு மற்றும் காய்கறிகள் வைக்க சற்று சிரமமாக இருக்கும் பொழுது எளிமையான முறையில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து அருமையான தொக்கு செய்து காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் திருப்தியாக சாப்பிட விரும்புபவர்களுக்கு இந்த ரெசிபி மிகவும் உதவியாக இருக்கும். எந்த காயும் தேவையில்லை வெறும் வெங்காயம் வைத்து அருமையாக காரசாரமான தொக்கு செய்வதற்கான ரெசிபி இதோ…

வெங்காய தொக்கு செய்வதற்கான மசாலாவை தயார் செய்து கொள்ளலாம். இதற்காக ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி தனியா, ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம், ஒரு தேக்கரண்டி சீரகம், அரை தேக்கரண்டி வெந்தயம், காரத்திற்கு ஏற்ப காய்ந்த வத்தல் ஐந்து முதல் ஏழு சேர்த்து நல்ல வாசனை வரும் வரை வருத்துக்கொள்ள வேண்டும். இறுதியாக இரண்டு கொத்து கருவேப்பிலை சேர்த்து வறுத்துக் கொள்ளலாம்.

இப்பொழுது வறுத்த அனைத்து பொருட்களையும் சிறிது நேரம் ஆற வைத்து அதன் பிறகு மிக்ஸி ஜாரில் சேர்த்து மையாக பொடி செய்து கொள்ள வேண்டும். அடுத்ததாக நான்கு பெரிய வெங்காயத்தை எடுத்து நீளவாக்கில் பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.

மீண்டும் அதே கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து ஐந்து பல் வெள்ளை பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெள்ளைப்பூண்டுவின் நிறம் மாறியதும் நாம் நீளவாக்கில் நறுக்கி வைத்திருக்கும் நான்கு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்ததும் சிறிய நெல்லிக்காய் அளவு புளி சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது நாம் வதக்கிய பொருட்கள் சூடு ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக அதை கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, அரை தேக்கரண்டி சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக அடுப்பை மிதமான தீயில் வைத்து ஒரு தேக்கரண்டி காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி கொள்ளலாம். இந்த நேரத்தில் நாம் அரைத்து வைத்திருக்கும் வெங்காய விழுதுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளலாம்.

கோவில்களில் மட்டுமே ஸ்பெஷலாக வழங்கப்படும் கல்கண்டு பொங்கல்! தித்திப்பான ரெசிபி இதோ…

கடாயில் தண்ணீர் நன்கு வற்றி தொக்கு கெட்டி பதத்திற்கு வரும் நேரத்தில் நாம் அரைத்து வைத்திருக்கும் பொடி இரண்டு தேக்கரண்டி சேர்த்துக் கொள்ளலாம். மீண்டும் கைவிடாமல் தொடர்ந்து கிளற வேண்டும். இறுதியாக தொக்கு கெட்டியானால் சுவையான வெங்காயத் தொக்கு தயார்.

இதை காற்று புகாத பாத்திரத்தில் சேமித்து வைக்கும் பொழுது ஒரு மாதம் ஆனாலும் இந்த தொக்கு கெட்டுப் போகாது. மேலும் இதை சூடான சாதம், இட்லி, தோசை என அனைத்திற்கும் வைத்து சாப்பிடலாம்.

Exit mobile version