செட்டிநாடு ஸ்டைல் வறுத்து அரைத்த நண்டு குழம்பு!

பொதுவாக அசைவ குழம்புகள் சமைக்கும் பொழுது கடையில் விற்கப்படும் மசாலாக்களை பயன்படுத்தாமல் வீட்டிலேயே வறுத்து அரைத்து மசாலா தயாரித்து புதிதாக சமைக்கும் பொழுது அதன் சுவையும் வாசமும் சாப்பிடுபவர்களை மெய்மறக்கும் அளவில் அமைந்திருக்கும். இந்த முறை செட்டிநாடு ஸ்டைலில் வறுத்து அரைத்த மசாலாக்களை கொண்டு நண்டு குழம்பு செய்யலாம் வாங்க…

முதலில் ஒரு அகலமான கடாயில் காரத்திற்கு ஏற்ப எட்டு முதல் 10 காய்ந்த வத்தல், ஒரு தேக்கரண்டி மல்லி, ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம், ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி மிளகு சேர்த்து வாசனை வரும்வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும். வறுத்த பொருட்களை சிறிது நேரம் சூடு ஆறும் வரை ஒரு அகலமான தட்டிற்கு மாற்றி ஆற வைக்க வேண்டும்.

வறுத்த பொருட்களின் சூடு நன்கு ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொள்ள வேண்டும். இந்த பொருட்களுடன் 10 பல் வெள்ளைப் பூண்டு, அரை கப் தேங்காய் துருவல், நன்கு பழுத்த இரண்டு தக்காளி பழத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இவை அனைத்தையும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் மற்றொரு கடாயில் மூன்று தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம், கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். கருவேப்பிலை நன்கு பொரிந்ததும் மூன்று முதல் நான்கு பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய மூன்று பெரிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.

வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் நன்கு பழுத்த ஒரு தக்காளி பழத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும். இப்பொழுது கடாயில் ஒரு தேக்கரண்டி உப்பு, அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், இரண்டு தேக்கரண்டி குழம்பு மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். எண்ணெயுடன் மசாலாக்கள் சேர்ந்து பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி கொள்ளவும்..

இந்த நேரத்தில் நம் நன்கு கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் நண்டுவை அதில் சேர்த்து வதக்க வேண்டும். இரண்டு நிமிடம் நண்டை எண்ணெய் உடன் பிரட்டி எடுத்ததும் அதில் நாம் வறுத்து அரைத்து வைத்திருக்கும் மசாலாக்களை சேர்த்துக் கொள்ளவும்.

செட்டிநாடு பலகார ஸ்பெஷல் ரங்கூன் புட்டு!

இப்பொழுது குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் சற்று அதிகமாக தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். நன்கு கொதித்து வரும் பொழுது குழம்பு பற்றி விடும். மிதமான தீயில் நண்டு குழம்பு வை 10 முதல் 20 நிமிடங்கள் மூடி போட்டு கொதிக்க விட வேண்டும்.

மூடி போட்டு வேக வைக்கும் பொழுது குழம்பு நன்கு கொதித்து நண்டில் உள்ள சாறு குழம்பில் இறங்கும். அப்பொழுதுதான் குழம்பு மேலும் சுவையாக இருக்கும். 20 நிமிடம் கழித்து பொடியாக நறுக்கிய மல்லி தலைகள் தூவி இறக்கினால் சுவையான வறுத்து அரைத்த நண்டு குழம்பு தயார்.

Exit mobile version