இரண்டு தேக்கரண்டி எண்ணெயில் சிக்கன், மட்டன் சுவையில் அருமையான மீல்மேக்கர் கபாப்!

வீடுகளில் அசைவ உணவான சிக்கன் மட்டன் என சமைக்க முடியாத சில நேரங்களில் அதே சுவையில் மீல்மேக்கர் வைத்து அருமையான கபாப் செய்து சாப்பிடலாம் வாங்க. இந்த கபாப் செய்வதற்கு இரண்டு தேக்கரண்டி எண்ணையே போதுமானது. குறைவான எண்ணையை பயன்படுத்தி சுவையான கபாப் செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ….

கபாப் செய்வதற்கு ஒரு கப் மீல்மேக்கரை நன்கு கொதிக்கும் தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். ஊற வைக்கும் பொழுது அரை தேக்கரண்டி உப்பு சேர்த்த தண்ணீரில் ஊற வைத்தால் மீல் மேக்கர் சுவையாக இருக்கும். பத்து நிமிடம் கழித்து மீல்மேக்கரை நன்கு பிழிந்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

தேவைப்பட்டால் மீண்டும் ஒரு முறை குளிர்ந்த நீரில் சுத்தம் செய்து கொள்ளலாம். அப்படி தனியாக எடுத்து வைத்திருக்கும் மீல்மேக்கரை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் இரண்டு பச்சை மிளகாய், ஒரு சிறிய துண்டு இஞ்சி, 5 பல் வெள்ளை பூண்டு, ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து அரைக்க வேண்டும்.

இந்த கலவையை அரைக்கும் போது தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் மையாக மீல்மேக்கரை அரைக்க வேண்டாம் பரபரவென அரைத்துக் கொள்ளலாம். அரைத்து விழுதுகளை ஒரு அகலமான பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும். இதனுடன் காரத்திற்கு ஏற்ப அரை தேக்கரண்டி தனி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி சாட் மிளகாய் தூள், அரை தேக்கரண்டி கரம் மசாலாத்தூள், அரை தேக்கரண்டி சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

இந்த கலவையுடன் ஒரு உருளைக்கிழங்கை நன்கு வேக வைத்து மசித்த மாவை அதனுடன் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கிய ஒரு பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய கைப்பிடி அளவு மல்லி கருவேப்பிலை இலைகள் சேர்ந்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

இறுதியாக இரண்டு கப் கடலை மாவு சேர்த்து பிசைந்து கொள்ளவும். தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளலாம். அதிகப்படியாக தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. சிறிதளவு எண்ணெயை கையில் தடவி இந்த மாவை நன்கு கெட்டியாக பிசைந்து கொள்ளவும். அதன் பின் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பருப்பு வடை அளவிற்கு தட்டி எடுத்துக் கொள்ளவும்.

காய்கறிகள் இல்லாமல் குருமா சாப்பிட வேண்டுமா? வாங்க அசத்தலான ஹைதராபாத் ஸ்டைல் பன்னீர் குருமா ட்ரை பண்ணலாம்!

இப்பொழுது ஒரு தோசை கல்லில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் நம் வட்ட வடிவில் தட்டி வைத்திருக்கும் மீல்மேக்கர் கபாபை அதனுடன் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை பொறித்து எடுக்கவும்.

இப்பொழுது சுவையான மீல்மேக்கர் கபாப் தயார். இந்த கபாப் சாம்பார் சாதம், தயிர் சாதம், லெமன் சாதம், வெஜிடபிள் பிரியாணி, புலாவ் என அனைத்திற்கும் சிறந்த செய்திசாக இருக்கும். மேலும் மாலை நேரங்களில் டீ, காபி குடிக்கும் பொழுது ஒரு ஸ்நாக்ஸ் ஆகவும் செய்த சாப்பிடலாம்.

Exit mobile version