தொடர் மழை மற்றும் பனியின் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இருமல், காய்ச்சல், சளி போன்ற உடல் உபாதைகள் ஏற்படுவது வழக்கம். அதிலும் குழந்தைகளுக்கு சளி தொந்தரவு ஏற்படும் பொழுது சரியான தூக்கமின்மை காரணமாக மிகவும் பலகீனமாக இருப்பார்கள். தொடர்ந்து மருந்துகளை சாப்பிட்டு வருவதன் காரணமாக நாக்கிற்கு ருசி அறியாமல் சாப்பிட மறுத்தும் குழந்தைகள் அடம்பிடித்துக் கொண்டே இருக்கும். இப்படிப்பட்ட சமயங்களில் வீட்டு கைப்பக்குவத்தில் மருந்து குழம்பு வைத்து சூடான சாதத்தில் பிசைந்து கொடுக்கும் பொழுது சளித்தொல்லை நீங்கி குழந்தைகள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும். மருந்து குழம்பு செய்வதற்கான ரெசிபி இந்த தொகுப்பில் பார்க்கலாம்…
முதலில் மருந்து குழம்பு செய்வதற்கு தேவையான மசாலா பொருட்களை தயார் செய்து கொள்ளலாம். அதற்கு ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி மல்லி, ஒரு தேக்கரண்டி மிளகு, ஒரு தேக்கரண்டி சீரகம், அரை தேக்கரண்டி ஓமம், அரை தேக்கரண்டி வெந்தயம், ஒரு தேக்கரண்டி கடுகு, ஒரு தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, ஒரு சிறிய துண்டு சுக்கு, ஒரு சிறிய துண்டு மஞ்சள் கிழங்கு, ஒரு சிறிய துண்டு பெருங்காயம், காய்ந்த வத்தல் மூன்று சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக அதே கடாயில் கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளலாம். இப்பொழுது வருத்த பொருட்களை சிறிது நேரம் ஆற வைத்து பின்பு மிக்ஸி ஜாரில் ஒன்றாக சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக அதே கடாயில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடு படுத்தி கொள்ள வேண்டும்.
இதில் ஒரு தேக்கரண்டி கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு, கால் தேக்கரண்டி வெந்தயம், இரண்டு கொத்து கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளலாம். அடுத்து 10 முதல் 15 வெள்ளை பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.
பூண்டு பொன்னிறமாக வதங்கியது 10 முதல் 15 சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். வெங்காயம் நன்கு வதங்கியதும் நாம் வறுத்து அரைத்து வைத்திருக்கும் மசாலாவை இரண்டு தேக்கரண்டி சேர்த்து எண்ணெயோடு நன்கு வதக்க வேண்டும். மசாலாவின் பச்சை வாசனை சென்றவுடன் எலுமிச்சை பழ அளவு புளி கரைசல் சேர்த்துக் கொள்ளலாம்.
ஐந்தே நிமிடத்தில் மைதா மாவு சேர்க்காத அரிசி போண்டா! ரெசிபி இதோ…
இதனுடன் கூடுதலாக தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொடுத்து மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும். 10 முதல் 15 நிமிடம் மிதமான தீயில் கொதித்து வரவேண்டும்.
இறுதியாக ஒரு சிறிய துண்டு கருப்பட்டி சேர்த்து கிளறி கொடுத்து இறக்குவதற்கு முன்பாக ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து கலந்து இறக்க வேண்டும். இப்பொழுது அருமையான மருந்து குழம்பு தயார்.