பொதுவாக குருமா என்றாலே அதில் உருளைக்கிழங்கு, கேரட், பட்டாணி, பீன்ஸ், நூக்கல் போன்ற காய்கறிகளை மட்டுமே பார்த்திருப்போம். ஆனால் இந்த முறை யாரும் அதிகம் பயன்படுத்தாத முட்டைக்கோஸ் வைத்து அருமையான சுவையான குருமா ஒன்று செய்யலாம் வாங்க. இந்த முட்டைக்கோஸ் குருமா ஆப்பம், இடியாப்பம், சப்பாத்தி என அனைத்திற்கும் சிறந்த சைடிஷ்ஷாக இருக்கும். எளிமையான முறையில் செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில்…
முதலில் இந்த குருமா செய்வதற்கான மசாலாவை தயார் செய்து கொள்ளலாம். அதற்காக ஒரு மிக்ஸி ஜாரின் கைப்பிடி அளவு தேங்காய், இரண்டு பச்சை மிளகாய், கைப்பிடி அளவு புதினா இலைகள், பட்டை ஒன்று, கிராம்பு இரண்டு, ஏலக்காய் 2, சிறிதளவு கல்பாசி, அரை தேக்கரண்டி பெருஞ்சீரகம், அரை கப் வறுத்த வேர்க்கடலை, அரை தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்த்து மையாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
தேங்காய் மசாலா அரைக்கும் பொழுது தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். அடுத்ததாக ஒரு அகலமான பாத்திரத்தில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு எண்ணெயோடு வதக்க வேண்டும்.
இஞ்சி பூண்டு விழுதுவின் பச்சை வாசனை சென்றவுடன் நன்கு பழுத்த ஒரு தக்காளி பழத்தை பொடியாக நறுக்கி கடாயில் சேர்த்துக் கொள்ளலாம். தக்காளி மசிந்து வரும் நேரத்தில் அரை தேக்கரண்டி மஞ்சள் மற்றும் அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்.
அடுத்ததாக குருமாவிற்கு தேவையான மசாலா பொருட்களை சேர்த்துக்கொள்ள வேண்டும். இதற்காக ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள், ஒன்றரை தேக்கரண்டி தனியாத்தூள், அரை தேக்கரண்டி சீரகத்தூள், அரை தேக்கரண்டி கரம் மசாலா சேர்த்து நன்கு மசாலா வாசனை செல்லும் வரை வதக்கி கொள்ள வேண்டும்.
இந்த நேரத்தில் கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய முட்டைக்கோசுவை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். மிதமான தீயில் இரண்டு நிமிடம் வரை முட்டைக்கோசை வைக்க வேண்டும். அதன் பிறகு நான் முதலில் அரைத்த மசாலாவை பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளலாம்.
இப்பொழுது குருமாவிற்கு தேவையான அளவு தண்ணீர் கலந்து உப்பு சரிபார்த்து மூடி போட்டு பத்து முதல் 15 நிமிடம் கொதிக்க விட வேண்டும். 15 நிமிடத்திற்கு பிறகு கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான முட்டைக்கோஸ் குருமா தயார்.
—