பத்து நிமிடத்தில் கேரளா ஸ்பெஷல் கலத்தப்பம்!

கேரளா ஸ்பெஷல் கலத்தப்பம் சாப்பிட கேரளா செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நம் வீட்டிலேயே பத்து நிமிடத்தில் தயார் செய்து குடும்பத்துடன் சேர்ந்து சாப்பிடலாம் வாங்க. இந்த கலத்தப்பம் செய்வதற்கான எளிமையான ரெசிபி இதோ…

கலத்தப்பம் செய்வதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பாக ஒரு கப் பச்சரிசியை நன்கு கழுவி சுத்தம் செய்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும்.

அப்படி மூன்று மணி நேரம் ஊற வைத்த பச்சரிசியை ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றிக்கொள்ள வேண்டும். அதனுடன் இரண்டு ஏலக்காய், கைப்பிடி அளவு வடித்த சாதம், ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அடுத்ததாக ஒரு குக்கரில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் பொடியாக நறுக்கிய தேங்காய் பல் ஒரு கப் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும். மீதம் இருக்கும் அதே நிலையில் பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து இனிப்பிற்காக ஒரு டம்ளர் வெல்லத்தை அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். வெல்லம் நன்கு கரைந்து கொதித்து வரும் நேரத்தில் ஒரு வடிகட்டி கொண்டு வெல்லப்பாகை நன்கு வடித்து அரைத்து வைத்திருக்கும் மாவு கலவையினுள் சேர்க்க வேண்டும்.

வெல்லப்பாகை தொடர்ந்து அப்படியே ஊற்றி விடக்கூடாது சிறிது சிறிதாக மாவு கலவையினுள் மெதுவாக ஊற்றி கலந்து கொடுக்க வேண்டும். இல்லையென்றால் கட்டியாக மாறிவிடும். அதன் பின் நாம் எண்ணையில் வறுத்து வைத்து இருக்கும் தேங்காய்ப்பல், வெங்காயம் இவற்றை இதனுடன் சேர்த்து கலக்க வேண்டும்.

இதனுடன் இறுதியாக கால் தேக்கரண்டி ஆப்ப சோடா சேர்த்து நன்கு கலந்து கொடுத்து சூடாக இருக்கும் குக்கரில் ஊற்றி விட வேண்டும்.

விசேஷ நாட்களில் வீட்டில் செய்யும் கந்தரப்பம்! ரெசிபி இதோ!

இப்பொழுது குக்கரை மூடி விசில் போட வேண்டிய அவசியம் இல்லை. குக்கரிலேயே கலத்தப்பம் செய்தால் சில நேரங்களில் அடி பிடிக்கும் என்ற காரணத்தினால் ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து நன்கு சூடானதும் அந்த குக்கரை அதில் மாற்றி விட வேண்டும்.

குக்கரை 10 நிமிடங்கள் மிதமான தீயில் வேக வைக்க வேண்டும். பத்து நிமிடம் கழித்து திறந்து பார்க்கும் பொழுது நமக்கு சுவையான கலத்தப்பம் தயார்.

Exit mobile version