வெள்ளை பூசணி வைத்து மிக சுவையான காசி அல்வா!

அல்வா அனைவருக்கும் பிடித்தமான உணவு வகைகளில் ஒன்று. நினைத்ததும் நாவில் எச்சில் ஊரும் அளவிற்கு அதன் சுவை மிகவும் தித்திப்பாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் அல்வாவை புதுவிதமாக வெண்பூசணி வைத்து சுவையான காசி அல்வா செய்யலாம் வாங்க.

இந்த அல்வா செய்வதற்கு குறைந்தது 250 முதல் 300 கிராம் அளவுள்ள ஒரு வெள்ளை பூசணி துண்டை எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் வெளிப்புறம் நன்கு கழுவி சுத்தம் செய்து தோல்களை நீக்கிக் கொள்ளவும். இந்த வெள்ளை பூசணியை ஒரு புட்டு துருவல் வைத்து நன்கு துருவி கொள்ள வேண்டும்.
அதன் பின் துருவிய வெள்ளை பூசணியை நன்கு கைகள் கொண்டு அல்லது வெள்ளைத் துணியில் வைத்தோ அதில் உள்ள தண்ணீரை மட்டும் நன்கு பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு கடாயில் இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் 10 முதல் 15 முந்திரி பருப்புகளை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். மீதம் இருக்கும் அதே நெய்யில் நாம் பிழிந்து வைத்திருக்கும் வெள்ளை பூசணி துருவலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

மிதமான தீயில் பூசணி துருவலை நன்கு நெய்யுடன் சேர்த்து வதக்க வேண்டும். எந்த அளவிற்கு நாம் பொறுமையாக நெயில் வதக்கி எடுக்கிறோமோ அந்த அளவிற்கு அல்வா பதமாகவும் சுவையாகவும் இருக்கும். அதன் பின் நம் பூசணியிலிருந்து பிழிந்து எடுத்திருக்கும் பூசணி தண்ணீரை அதனுடன் சேர்த்து மிதமான தீயில் வேகும் வரை கிளறி கொடுக்க வேண்டும்.

ஒரே மண மணக்கும் கல்யாண வீட்டு கெட்டி சாம்பார்!

தண்ணீர் சுண்டி வரும் நேரத்தில் ஒரு கப் சர்க்கரையை கடாயில் சேர்த்து மீண்டும் கலந்து கொடுக்க வேண்டும். சர்க்கரை நன்கு கரைந்து கெட்டியாக வரும் நேரத்தில் ஒரு தேக்கரண்டி ஃபுட் கலர் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஃபுட் கலர் சேர்க்க விருப்பம் இல்லாதவர்கள் குங்கும பூவை தண்ணீரில் ஊறவைத்து அந்த வண்ணத்தை சேர்த்துக் கொள்ளலாம்.

இறுதியாக இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து விடாமல் ஐந்து முதல் பத்து நிமிடம் கிளறினால் கட்டியான கேசரி பதத்திற்கு வந்து விடும். இப்பொழுது நாம் நெய்யில் வறுத்து வைத்திருக்கும் முந்திரி பருப்பு அரை தேக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்த்து மீண்டும் கிளறி இறக்கினால் சுவையான வெள்ளை பூசணி காசி அல்வா தயார்.

Exit mobile version